பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகின் பல முன்னணி பேட்மிண்டன் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிறப்பாக ஆடிய இந்திய வீராங்கனைகள் பி.வி. சிந்து, சாய்னா நெஹ்வால் ஆகியோர் காலிறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சாய்னா நெஹ்வால், 17 வயதே நிரம்பிய தென் கொரிய வீராங்கனை ஆன் சி யங்கை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டில் இரண்டு புள்ளிகளுடன் ஆன் சி யங் தனது கணக்கை தொடங்கினார். அதன் பின் இரு வீராங்கனைகளும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் தொடர்ந்து விளையாடினர். இருப்பினும் முதல் செட்டை சாய்னா 20-22 என்ற செட் கணக்கில் இழந்தார்.
அதன்பின் இரண்டாவது செட்டிலும் முதலில் சி யங்கே புள்ளிகளைப் பெற்றார். இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றனர். இறுதிவரை பரபரப்பாகவே நடைபெற்ற இப்போட்டியில் சாய்னா 21-23 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் ஆன் சி யங்கிடம் இழந்தார். இதனால் சாய்னா நெஹ்வால் காலிறுதிச் சுற்றுடன் வெளியேறியதால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.