ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, சீனாவின் ஹன் யூவை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி. சிந்து 21-9 என்ற கணக்கில் வென்றார். பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் இரு வீராங்கனைகளும் சரிக்கு சமமாக விளையாடியதால் ஆட்டம் பரபரப்பாகச் சென்றது. இறுதியில், பி.வி. சிந்து இரண்டாவது செட்டை 21-17 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதன்மூலம், பி.வி. சிந்து 21-9, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள போட்டியில் அவர் ஜப்பான் வீராங்கனை அயா ஒஹாரியை சந்திக்கவுள்ளார்.
இதேபோல், நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், சக வீரர் ஹெச். எஸ். பிரனாய் உடன் மோதினார். இதில், ஸ்ரீகாந்த் 21-13, 11-21, 20-22 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் பிரனவ் ஜெர்ரி சோப்ரா / சிக்கி ரெட்டி ஜோடி 11-21, 14-21 என்ற கணக்கில் சீனாவின் ஸெங் / ஹுவாங் (Zheng/ Huaung) இணையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.