கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எந்தவொரு பேட்மிண்டன் தொடர்களும் இந்த ஆண்டில் நடக்கவில்லை. அனைத்துத் தொடர்களும் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடருக்காகத் தன்னை தயார்படுத்திவருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''பேட்மிண்டனை மிகவும் மிஸ் செய்கிறேன். ஆனால் எனது வீட்டில் தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டுவருவதால், நல்ல ஃபார்மில் இருக்கிறேன்.
கரோனா சூழலுக்குப் பின் மீண்டும் பேட்மிண்டன் ஆடத் தொடங்கியபோது, ஃபார்மிற்கு வர சில வாரங்கள் எடுத்தன. பேட்மிண்டன் தொடர்கள் மீண்டும் தொடங்குவதற்காக காத்திருக்கிறேன்.
பேட்மிண்டன் போட்டிகள் நடந்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. அதனால் நிச்சயம் ஒவ்வொருவருக்கும் இனி வரப்போகும் தொடர் வித்தியாசமாக இருக்கப்போகிறது.
ஒலிம்பிக் தொடரைப் பொறுத்தவரை ஒன்றிரண்டு வீராங்கனைகளை மட்டும் கடினம் என எண்ணிவிட முடியாது. அனைத்து வீராங்கனைகளுமே கடினமாகத்தான் இருக்கப்போகிறார்கள். டாப் 10இல் இருக்கும் அனைத்து வீராங்கனைகளும் ஒரே மாதிரிதான். மிகவும் சவாலானவர்கள்.
நான் பாசிட்டிவ்வாக இருக்கிறேன். அனைத்தும் நல்ல முறையில் நடக்கும் என நம்புவோம். நிச்சயம் வீட்டிலேயே இருந்து பயிற்சி செய்வது சோகமாகத்தான் இருக்கிறது. ஆனால் உலகமே அப்படியேதான் இருக்கிறது. அதனால் நம்மை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அனைத்தையும்விட வாழ்க்கையும், உயிரும் முக்கியம்'' என்றார்.
இதையும் படிங்க: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தினேஷ் கார்த்திக்!