உலகக்கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதையடுத்து, பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உட்பட பல தலைவர்களும், நட்சத்திரங்களும் பி.வி சிந்துவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான சாமுண்டேஸ்வரநாத் சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ(bmw) காரை பரிசளித்துள்ளார். இந்த காரை வழங்கும்போது சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் உடனிருந்தார். இந்நிகழ்வில் நடிகர் நாகார்ஜூனாவும் கலந்துகொண்டார்.
தெலங்கானா பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவரான சாமுண்டேஸ்வரநாத், தன்னுடைய நண்பர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி சேகரித்து, வளர்ந்துவரும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு கார்களை பரிசாக வழங்குகிறார்.
இவர் இதுவரை 21 இளம் வீரர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 22ஆவது காரை சாமுண்டேஸ்வரநாத்திடமிருந்து பி.வி சிந்து பெற்றுள்ளார்.
இதுகுறித்து பயிற்சியாளர் கோபிசந்த் பேசுகையில், “இந்த பரிசை விளையாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாக உணர்கிறேன். ஒரு பேட்மிண்டன் வீராங்கனையே இதை பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பரிசு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் சிந்து சாம்பியன் பட்டம் வெல்ல ஊக்கமளிக்கும்” என்றார்.
இதனையடுத்து சாமுண்டேஸ்வரநாத் பேசுகையில், “சிந்து வெற்றியடைந்ததற்காக என்னால் முடிந்த சிறிய பரிசை வழங்கியுள்ளேன். எந்த பணமும் பரிசும் சிந்துவின் சாதனைக்கு ஈடாகாது” என்றார்.