2018முதல் 2019 வரை உலகில் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இவர், விளம்பரத்தின் மூலம் 25 மில்லியன் டாலரும், போட்டி ஊதியத்தின் மூலம் 4.2 மில்லியன் டாலர் என மொத்தமம் 29.2 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.207 கோடி) வருவாய் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து, ஜப்பானின் இளம் டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா (விளம்பரம் - 16 மில்லியன் டாலர், போட்டி ஊதியம் - 8.3 மில்லியன் டாலர்) என மொத்தம் 24.3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 172 கோடி) வருவாய் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதில், ஜெர்மனி டென்னிஸ் வீராங்கனை கெர்பர் (விளம்பரம் - 6.5 மில்லியன் டாலர், போட்டி பரிசுத் தொகை - 5.3 மில்லியன் டாலர்) என மொத்தம் 11.8 மில்லயன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 83 கோடி) வருவாய் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இப்பட்டியலில் இந்தியா சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மட்டுமே இடம்பிடித்துள்ளார். அவர் விளம்பரத்தின் மூலம் 5 மில்லியன் டாலரும், போட்டி ஊதியம் பரிசுத் தொகை என 0.5 மில்லியன் டாலர் என 5.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 38 கோடி) வருவாய் பெற்று 13ஆவது இடத்தை அமெரிக்க வீராங்கனை மெடிசன் கீஸுடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான இப்பட்டியலில் பி.வி. சிந்து 8.5 மில்லியன் டாலருடன் ஏழாவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.