தமிழ்நாடு வந்துள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், உலகநாயகனுமான கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். பின் இருவரும் இணைந்து உணவு உண்டனர். இதையடுத்து இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பி.வி.சிந்து பேசுகையில், 'மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர், நல்ல அரசியல் தலைவர் என்பதால் சந்தித்தேன். அடுத்ததாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தீவிரப் பயிற்சி செய்து வருகிறேன்' என்றார்.
இதையடுத்து பேசிய கமல்ஹாசன், 'பி.வி.சிந்துவுக்கான அனைத்து உதவிகளையும் நான் செய்வேன். பேனர் வைக்கக் கூடாது என்று நான் சொல்ல மாட்டேன். சினிமாவில் இருந்துகொண்டு பேனர் வைக்கக் கூடாது என்று கூறுவது பொருத்தமாக இருக்காது. பேனர் வைக்க வேண்டும் என நினைத்தால், சட்டப்படி அனுமதி பெற்ற இடங்களில் வைக்க வேண்டும்.
அதேபோல் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் தமிழ்நாடு வருவது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. அவரை வரவேற்க வேண்டும். சீன அதிபரின் வருகையை வெற்றி விழாவாக மாற்றுவது நம் கடமை. இருநாட்டு மக்களின் நலன்களுக்காக எடுக்கும் எந்தவொரு முடிவையும் வரவேற்கிறேன். அது வெற்றிபெற வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே: பி.வி சிந்துவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் தந்த ஷாக்!