சுவிட்சர்லாந்தின் பேஸல் நகரில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடினர். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்தார்.
சனிக்கிழமை(24.8.19) அன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகின் மூன்றாம் இட வீராங்கனையான சீனாவின் சென் யுபெயை 21-7, 21-14 என்ற செட் கணக்கில் 40 நிமிடங்களில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார். 2017, 2018ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை சென்ற பி.வி.சிந்து இரண்டு முறையும் தோல்வியுற்று இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் நடைபெறும் இந்தப்போட்டியில் தங்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஹார்ட் பீ்ட்டை எகிற வைத்தது. பேட்மிண்டன் போட்டியின் போது ஆக்ரோஷமான சிந்துவை பார்த்திருக்கிறோம். தோல்வியை சிரிப்புடன் ஏற்கும் பி.வி.சிந்து இந்தியாவின் நம்பிக்கை நாயகி என்பதை, இறுதிப்போட்டியில் நிரூபித்துவிட்டார். இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நசோமி ஒகுஹாராவுடன் நேருக்கு நேர் மோதி பலமான எதிரியை வீழ்த்தி இந்தியாவின் தங்க நாயகியாக ஜொலிக்க தொடங்கிவிட்டார் சிந்து.
இவரது வெற்றியை இந்தியாவின் கடைக்கோடி ரசிகனும் கொண்டாடி மகிழ்கிறான். ஒவ்வொரு முறையும் தோல்வியும் ஒரு பாடம்தான். அதை சரியாக கற்க வேண்டும் என்பது சிந்துவின் வெற்றியில் தெரிகிறது. இந்நிலையில், சிந்து வெற்றியடைந்ததை சிலாகித்து ஹைதராபாத்தில் அவரது குடும்பத்தினரும் கொண்டாடும் காட்சி பார்ப்பவரை மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்வில் எல்லோரும் சாம்பியன் ஆவதில்லை... தனது மகள் சாம்பியன் ஆகிவிட்டாள் தங்கப்பதக்கம் வென்றுவிட்டாள் என்ற ஒற்றைச்சொல் அவரது வீட்டையே ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.
கைதட்டல்களுடன் மகிழ்ச்சிக்கடலில் பி.வி.சிந்து வீடு தத்தளிக்கிறது. இதுபோன்ற மகிழ்ச்சி உலகில் உள்ள எந்த தாய் தந்தையருக்கும் கிடைக்காது. தாய், தந்தையையும் உச்சி முகர வைத்த வீர மங்கை சிந்துவை தனது பக்கத்தில் வைத்து முத்தம் கொடுக்க பரிதவித்த தாய் ஆனந்தக கண்ணீர் மூலம் தனது மகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறார். பலருக்கும் தெரியாது சிந்துவின் வீட்டை அலங்கரிப்பது அவர் வாங்கிய மெடல்கள்தான் என்று. வீட்டிலுள்ள மெடல்கள் அனைத்திற்கும் பின்பு ஒரு சரித்திரம் இருக்கிறது. கண்ணீர் இருக்கிறது.
வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, சோதனை இருக்கிறது. ஆனால் இந்த சோதனை பலரையும் கொண்டாட வைத்துள்ளது. பி.வி. சிந்துவின் வெற்றியால் அவரது வீடே திருவிழாகோலம்போல் காட்சியளிக்கிறது. அவரது பெற்றோர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்கின்றனர்.
பலருக்கும் தத்துவமாய் நிற்கும் பி.வி. சிந்து வீட்டில் ஒரு புதிய பட்டம் பெற்ற தங்க மெடல் குடியிருக்கப் போகிறது. அது பலருக்கும் ஒரு வரலாற்றை கற்பிக்க இருக்கிறது என்றால் மிகையாகாது. கிரிக்கெட், ஹாக்கிக்காக கைதட்டிய இந்தக் கூட்டம், இனி பி.வி.சிந்துவிற்காக தங்க சிலைகளை வடிக்கும். பி.வி.சிந்துவோடு இந்த பேட்மிண்டன் போட்டி நின்றுவிடபோவதில்லை பல கதாநாயகிகளை உருவாக்கப் போகிறது. வாழ்க்கையில் போராடி வெற்றிபெறுபவர்களுக்கு மட்டுமே வரலாற்றில் இடம் உண்டு.
பி.வி.சிந்து என்னும் நாயகி என்றும் வரலாற்றில் வாழ்வார்... வாளேந்தி வானளவிற்கு உயர்த்தி பிடிப்போம் பேட்மிண்டனை... இது பி.வி.சிந்துவுடன் முடியபோகும் சகாப்தம் அல்ல. உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு ஈடிவி பாரத் சார்பாக வாழ்த்துகள்.