இந்தியாவில் படிப்படியாக அதிகரித்துவரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் அடிதட்டு மக்கள், தினக்கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், தன்னார்வு அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் பிரதமரின் நிவாரண நிதிக்கும், மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கும் நிதி அளித்துவருகின்றனர்.
அந்தவகையில், இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை பயிற்சியாளரான புல்லேலா கோபிசந்த் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 11 லட்சமும், தெலங்கானா மாநில நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சமும், ஆந்திர மாநில நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சமும் நிதி வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு என்னால் முடிந்த உதவியை நான் செய்துள்ளேன். பல மொழி பல இனம் கொண்ட மக்கள் வாழும் நம் இந்தியாவில் பல்வேறு சவால்களை கடந்து மத்திய, மாநில அரசுகள் இந்த கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. எனவே அவர்களுக்கு உதவும் வகையில் நாம் அனைவரும் வீட்டில் பாதுகாப்புடன் இருப்போம் என்றார்.
முன்னதாக, இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் ஆகியோர் தலா ரூ. 10 லட்சம் நிதி வழங்கியுள்ளனர். நாட்டில் இதுவரை கரோனா வைரசால் 4 ஆயிரத்து 421 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.