உலக துப்பாக்கிச் சுடும் கோப்பை வரும் 20 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்பதற்காக, இந்தியாவுக்கு வரவிருக்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலுக்கு முன்னேதாகவே, பாகிஸ்தானை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர்களுக்கு இந்திய துப்பாக்கிச் சுடும் சங்கம் விசா வழங்கியிருந்தது.
புல்வாமாவில் ஏற்பட்ட கோர தாக்குதலினால் தற்போது பாகிஸ்தான் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பார்களா என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில், மேலும் இரண்டு பாகிஸ்தான் வீரர்களுக்கும், பயிற்சியாளருக்கும் விசா வழங்கப்பட்டுள்ளது.எந்த ஒரு விளையாட்டிலும் இந்தியா பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.