மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச சிறப்பு கோடைகால ஒலிம்பிக் போட்டி மார்ச் 14 முதல் 21ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், இந்தியா, இத்தாலி உள்ளிட்ட 190 நாடுகள் பங்கேற்றன.
இந்தியா சார்பில் இந்தத் தொடரில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, தடகள வீரர்கள் மட்டும் 154 வெள்ளி, 129 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
பளுதூக்குதல் போட்டிகளில்தான் இந்தியா அதிகமான தங்கப்பதக்கங்களை குவித்துள்ளது. இந்தப் போட்டியில் 20 தங்கம், 33 வெள்ளி, 43 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, ரோலர் ஸ்கேட்டிங்கில் 13 தங்கம், 20 வெள்ளி, 16 வெண்கலமும், சைக்கிள் பந்தயத்தில், 11 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலம் என 45 பதக்கங்களை இந்தியா வென்றது. இதையடுத்து, டிராக் அண்ட் ஃபீல்டு தடகளத்தில் இந்தியா 5 தங்கம், 24 வெள்ளி, 10 வெண்கலம் என 39 பதக்கங்களை வென்றனர்.
இதன் மூலம் இந்தியா இந்தத் தொடரில் 85 தங்கம் என மொத்தம் 368 பதக்கங்களை குவித்துள்ளது. பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.