’கேம் ஆஃப் த்ரான்ஸ்’ 2019ஆம் ஆண்டே நிறைவுற்றிருந்தாலும் இன்றளவும் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலும் சீரிஸ் ரசிகளின் மனதை ஆட்கொண்டு தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் சீரிஸ்களுள் ஒன்று. இந்த சீரிஸின் வெற்றிக்கு திரைக்கதை, இசைக்கோர்ப்பு, ஒளிப்பதிவு, கதாப்பாத்திர வடிவமைப்புகள் என பல காரணங்கள் உள்ளன.
இத்தொடரின் டெனைரிஸ், ஜான் ஸ்நோ, செர்ஸி, ஆர்யா என பல கதாப்பாத்திரங்களுக்கும் தனித்தனியாக பெரும் ரசிகர் பட்டாளங்கள் இருந்தாலும், தொடரின் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் சிறிதும் தொய்வின்றி ரசிக்கப்பட்ட கதாபாத்திரம் என்றால், அது டிரியன் லேனிஸ்டர் தான்.
டிரியன் லேனிஸ்டராய் வாழ்ந்த பீட்டர் டிங்ளேஜ்
’டிரியன் லேனிஸ்டர்’ கதாபாத்திரத்திற்காக, நடிகர் Peter Dinklage, சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதுகளை (தொலைக்காட்சி தொடர்களுக்கான உயரிய விருது) நான்கு முறை தட்டிச் சென்றுள்ளார். பீட்டர் டிங்ளேஜ் அவரது பெயரையும் தாண்டி இன்றளவும் ’டிரியன்’ என்றே ரசிகர்களால் நினைவுகூரப்பட்டு, அழைக்கப்பட்டு வருகிறார். ஒரு சீரிஸ் நிறைவடைந்த பின்னரும் இத்தனை கோடி ரசிகர்களுடன் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இந்தக் பாத்திரம் அப்படி என்ன செய்தது?
”எது மனிதர்களைப் பிணைக்கிறது? படைகளா? தங்கமா? இல்லை நாட்டின் கொடிகளா? இவை எதுவுமில்லை. கதைகள்தான். ஒரு சிறந்த கதையைப்போல மக்களை ஒன்றிணைக்கக்கூடிய பலம் வாய்ந்த விஷயம் உலகில் இல்லை” டிரியன் லேனிஸ்டர் உதிர்க்கும் பிரபலமான வசனங்களில் ஒன்று இது. இதுபோல் ஒரு தேர்ந்த கதைசொல்லலின் பலனாய், உலகத் தொலைக்காட்சி ரசிகர்களுக்குக் கிடைத்த Game of Thronesஇன் மிக விருப்பமான, அனைவராலும் ரசித்துப் போற்றப்படுகின்ற ஒரு கதாபாத்திரம் தான் இந்த டிரியன் லேனிஸ்டர்.
டிரியன் லேனிஸ்டர். கதையின்படி அவர் பிறப்பால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், நாம் எதிர்ப்பார்ப்பது போல் "ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெய்ட்டு டா” எனக் கதறி கார் கண்ணாடிகளை உடைத்து, ஆஜானுபாகுவான தோற்றத்துடன் வலம் வரும் வழக்கமான நம்ம ஊர் ஹீரோக்களைப் போன்றவர் அல்ல. குள்ளமான வளர்ச்சி குன்றிய மனிதர், சற்றே விகாரமான தோற்றத்தை உடையவர். பிரசவத்தில் தன் அன்னையை இழந்து பிறந்ததால், தன் சொந்த அப்பாவாலேயே வெறுத்து ஒதுக்கப்படும் பிள்ளை.
’மூளையை பட்டைதீட்டப் பயன்படும் புத்தகங்கள்’
இப்படி ஒரு ஹீரோவுக்கான எந்த பொதுவான அடையாளமுமே இல்லாமல், தன் புத்திக்கூர்மையாலும், நகைச்சுவையான பேச்சாலும் முதலில் பெரும் கவனம் ஈர்த்தார். "ஏன் நீ எப்பொழும் புத்தகங்களுடனேயே இருக்கிறாய்?” எனக் கேள்வி எழுப்பப்படும் இடத்தில், "உடல் பலம் பொருந்தியனுக்கு பக்கபலமாய் இருக்கும் கூர்வாளை, பட்டைத் தீட்டப் பயன்படும் சாணைக்கல் போல, எனது பக்கபலமான மூளையைப் பட்டைத் தீட்டப் பயன்படுத்தப்படுபவைதான் புத்தகங்கள்” என டிரியன் பதிலளிக்கும் காட்சி ஏகப் பிரபலம்.
Game of Thronesஇல் எந்தக் கதாபாத்திரம் எப்போது கொல்லப்படும் என்று எவராலும் கணிக்க முடியாது. இப்படியான சீரிஸில் உடல் வலிமையில் சிறந்தவனும் நொடிப்பொழுதில் இறந்துபோகும் இடங்களில், தனது மூளையையும் மன வலிமையையும் மட்டுமே பயன்படுத்தி சாவின் விளிம்பிலிருந்து டிரியன் தப்பிவரும் காட்சிகள் ஏராளம்.
’வாழ்க்கை சாத்தியங்களால் நிரம்பியது’
"இறப்பு மிகவும் சலிப்பான விஷயம், அதே நேரத்தில் வாழ்க்கை சாத்தியங்களால் நிரம்பியது” என டிரியன் உதிர்க்கும் வசனம் நம் ஊர் தியேட்டர்களில் ஒளிபரப்பப்பட்டிருந்தால் அப்ளாஸ்களையும், விசில்களையும் வாரி இறைத்திருக்கும். அதே போல் "நீ எவ்வாறு சாக விரும்புகிறாய்?" என பல இடங்களில் கேட்கப்படும் கேள்விக்கு, குறும்பான, சற்றே ஆபாசமான ஒரு பதிலை டிரியன் ஒவ்வொரு முறையும் அளித்தாலும், அந்த பதிலை புன்முறுவலோடு மகிழ்ச்சியாய் கடக்கும் ரசிகர்களே அதிகம். டிரியனின் நகைச்சுவைத் திறனுக்கு இந்தக் காட்சி ஒரு பதம்.
தன் குறையை கவசமாக அணிந்த நாயகன்
இவ்வளவு மனவலிமையும், புத்திக்கூர்மையையும், நகைச்சுவைத்திறனையும் டிரியன் தன் குறைகளுடன் சேர்த்து உபயோகிக்கும்போதுதான் மேலும் அழகாகிறார். தொடரில் கால்களை இழந்த ஒரு சக கதாபாத்திரத்துடன் பேசும்போது தன்னுடன் பொருத்திப் பார்த்து இவ்வாறு அவர் கூறுகிறார், "நீ யார் என்பதை ஒருபோதும் மறக்காதே, ஏனென்றால் உலகம் ஒருபோதும் அதை மறக்காது. உன் குறையை ஒரு கவசம்போல் அணிந்துகொள். அது உன்னை எப்போதும் காயப்படுத்தாது.”
இப்படி வசனங்களால் டிரியன் கதாபாத்திரம் நம்மை இந்த எட்டு சீசன்களிலும், ஒருபக்கம் மெய் சிலிர்க்க வைத்துக்கொண்டே இருந்தாலும், டிரியனின் உணர்ச்சி ததும்பும் இன்னொரு முகம், அபூர்வமாய் திரையில் தோற்றுவிக்கப்படக்கூடிய ஆழமான கதாபாத்திரங்களில் ஒன்று. சுற்றி இருக்கும் பெரும்பான்மை மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும்போது தனக்கு அன்பு காட்டும் அண்ணன் ஜேய்மியின் மீதான அவனது காதல், வர்ணிக்க இயலாத கவிதை.
அதேபோல் தன் ராஜதந்திரத்தால், அத்தனை ஆஜானுபாகுவான மனிதர்கள் இடையே டிரியன் தன் ராஜ்ஜியத்தைக் காப்பாற்றும் இடங்கள் இவனே உண்மைக் கதாநாயகன் என அழுத்தமாய் நிரூபிப்பவை.
2011 முதல் ஒளிபரப்பப்பட்ட எட்டு ஆண்டு Game of Thrones பயணத்தில் அதிக விமர்சனங்களை சந்தித்தது 8ஆவது சீசன்தான். அதில், டிரியன் தன் சொந்த நகரான வெஸ்டெரோஸில் அமர்ந்து தன் விருப்பப்படி வைன் அருந்தி தன் வழக்கமான நகைச்சுவைப் பேச்சோடு, அரசியல் கலந்தாய்வில் ஈடுபடுவதோடு தொடர் முடிவடைந்ததால்தான், தொடரின் முடிவு ரசிகர்களால் சற்றேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
8 பரிந்துரைகள், நான்கு எம்மி விருதுகள்
இத்தனை ரசிக்கும்படியான இந்தக் கதாபாத்திரம் மக்களிடையேபோய் சென்று சேர்ந்ததற்கு Game of Thronesஇன் இயக்குநர்கள், கதாசிரியர்கள் தாண்டி மிக முக்கியக் காரணமாய் விளங்கியவர் 'பீட்டர் டிங்க்ளேஜ்’. 2011 முதல், கடந்து வந்த எட்டு சீசன்களிலும் ஒரு சீசன் தவறாமல் எம்மிக்காக அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டதும், அதில் நான்கு எம்மிக்களை வென்று குவித்ததுமே பீட்டர் டிங்ளேஜின் நடிப்புத் திறனுக்கு சான்று. டிரியனையும் பீட்டரையும் மக்கள் என்றுமே பிரித்துப்பார்க்க விரும்பவில்லை என்பது ரசிகர்கள் அவருக்கு அளித்த அங்கீகாரத்திற்கான சான்று.
உயரத்தில் குள்ளமானவர்களை சர்க்கஸ் காட்சிகளுக்கும், ரசனையற்ற நகைச்சுவைக் காட்சிகளுக்கும் மட்டுமே பெரும்பான்மையாக பயன்படுத்திவந்திருக்கும் தமிழ் சினிமாவிற்கு டிரியனின் கதாபாத்திரமும், பீட்டர் டிங்ளேஜும் ஒரு பெரும் படிப்பினை.
காலங்கள் பல கடந்தும் உலகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வரலாற்றில் டிரியனின் கதாபாத்திரம் ஒரு சிம்ம சொப்பனமாய் நிலைத்து நிற்கும். டிரியனாய் வாழ்ந்து ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் ’பீட்டர் டிங்ளேஜ்’ எனும் கலைஞன் தன் வாழ்நாள் முழுவதும் இதற்காகப் போற்றிக் கொண்டாடப்படுவார்.