பிரபல தனியார் தொலைக்காட்சி நெடும் தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று பூந்தமல்லி அருகே தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் திரையுலகினர் மட்டுமின்றி மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் மனதில், அவர் நடித்த முல்லை கதாபாத்திரமாகவே அறியப்பட்டவர் சித்ரா. எப்போதும் நேர்மறை எண்ணம் கொண்டவரும் மனதைரியம் மிக்கவருமான சித்ரா தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என்கின்றனர் அவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள்.
சரி, யார் இந்த சித்ரா? சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த சித்ராவின் தாய் வித்யா; தந்தை காமராஜ் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர். இவருக்கு அண்ணன், அக்கா உள்ளனர். சித்ரா 1992ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி பிறந்தவர். முதுகலை பட்டதாரியான சித்ரா சென்னை எஸ்ஐடி கல்லூரியில் எம்.எஸ்சி., உளவியல் படிப்பு முடித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் ஆரம்பித்த அவரது பயணம் சன் டி.வி., ஜீ டி.வி., வேந்தர் டி.வி., உள்ளிட்ட சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். நடன நிகழ்ச்சிகளிலும், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
இப்படி படிப்படியாக தனது திறமைகளை வளர்த்து வந்த சித்ரா விஜய் டி.வி.,யின் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற நாடகத்தில் 'முல்லை' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த நாடகம் மூலமாகத்தான் சித்ரா அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். குறிப்பாக இல்லத்தரசிகள் சித்ரா- கதிர் ஜோடியை அவ்வளவு ரசித்தார்கள்.
இதனால் அந்த நாடகத்தின் முதன்மை கதாபாத்திரங்களை விட சித்ரா-கதிர் இணை அதிகம் பேரால் ரசிக்கப்பட்டது. இதனால் அவருக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக சித்ராவிற்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, எனக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை என கூறி அந்த நாடகத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஒருவர் கோபித்துக் கொண்டு நடிக்கமாட்டேன் என்று வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்துவந்த சித்ரா தனது புன்னகை மலர்ந்த புகைப்படங்களை அதில் பதிவிட்டு வந்துள்ளார். அவரது சிரித்த முக அழகிற்காகவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்ராவை பின்தொடர்வோர் எண்ணிக்கை பல லட்சங்களைக் கடந்தது.
இந்நிலையில்தான் சித்ரா தொழிலதிபர் ஹேமந்த் என்பவரை காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் ஏற்கனவே பதிவுத்திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த இரண்டு மாதங்களில் இருவருக்கும் திருமணம் நடைபெறயிருந்த நிலையில் சித்ரா தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சித்ராவின் தற்கொலை குறித்து நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். சித்ராவின் காதலர் ஹேமந்த்திடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தநிலையில் தனது மகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழையல்ல. எனது மகளை ஹேமந்த்தான் கொலை செய்துவிட்டான் என்று சித்ராவின் தாய் விஜயா குற்றஞ்சாட்டியுள்ளார். எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதனை துணிவுடன் எதிர்கொண்டு அதிலிருந்து மீள வேண்டும் என்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறிய சித்ரா, தானே தற்கொலை முடிவை எடுத்தது நம்பமுடியவில்லை என்று அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
சித்தராவின் உடற்கூராய்வு அறிக்கையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரின் உடல் நேற்று (டிசம்பர் 10) மாலை பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.