சென்னையில், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து படப்பிடிப்புகள் தொடங்கின. இந்நிலையில், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியைக் காணலாம்.
கேள்வி : சின்னத்திரை படப்பிடிப்புகள் 10ஆம் தேதிதான் தொடங்கியதா?
சின்னத்திரை படப்பிடிப்புகள் ஜுன் எட்டாம் தேதியே தொடங்கி விட்டன. ஏனென்றால் மாவட்ட ஆட்சியரிடம் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்குவதற்கான அனுமதி பெறுதல், படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவை துரிதமாக நடந்து முடிந்தன. இதனால் 10ஆம் தேதிவரை காத்திருக்காமல் எட்டாம் தேதியே ஒரு சில சீரியல் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து முழுமூச்சாக அனைத்து தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்புகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
கேள்வி : படப்பிடிப்பு தளங்களில் அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன?
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியுடன் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பிலும் படப்பிடிப்பு நடைபெறும் தளங்களில் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை நேரடியாக சென்று ஆய்வு செய்ய உள்ளோம். பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கிறார்களா என்று பார்வையிட உள்ளோம். பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருந்தால் அவை குறித்து தெளிவாக வலியுறுத்த உள்ளோம்.
கேள்வி : எந்தெந்த பகுதிகளில் தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன?
வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஈசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. ஈவிபியில் நடிகை குஷ்புவும் நானும் நேரில் சென்று படப்பிடிப்பு தளத்தை ஆய்வு செய்தோம். அங்கு பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கேள்வி : அவுட்டோர் ஷூட்டிங் தொடங்கிவிட்டதா?
அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கான அனுமதி, சென்னை மாநகராட்சியில் வழங்கப்படாது. படப்பிடிப்பு எந்தெந்த மாவட்டங்களில் நடைபெறுகிறதோ அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற பிறகே அவுட்டோர் ஷூட்டிங் நடத்த முடியும். திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவுட்டோர் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
கேள்வி : நாள் ஒன்றுக்கு எத்தனை எபிசோடுகள் எடுக்கப்படும்?
சின்னத்திரை படப்பிடிப்பில் நாளொன்றுக்கு ஒரு எபிசோட் எடுக்கப்படும். ஆனால், இப்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் அந்த ஒரு எபிசோடையும்கூட எடுக்க நேரமில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால், படப்பிடிப்பு தளத்தில் அரசு கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். காலை, பிற்பகல், மாலை என மூன்று வேளையும் படப்பிடிப்பு தளத்தை கிருமிநாசினி பயன்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும். இதற்கு அதிக அளவில் நேர விரயம் ஆகிறது. தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். போக்குவரத்தில் சிரமங்கள் உள்ளன. ஆகையால், அரசு வலியுறுத்தியுள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதால், ஒரு எபிசோட்கூட எடுக்க வாய்ப்பில்லை, குறைவான காட்சிகளே எடுக்கப்பட்டு வருகின்றன.
கேள்வி : இந்த சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
நிச்சயமாக தயாரிப்பாளர்களுக்கு இது நஷ்டத்தை ஏற்படுத்தும் விஷயம்தான். ஆனாலும், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கமுடியும் என்பதால், இந்த நஷ்டத்தை அனைத்து தயாரிப்பாளர்களும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். நாளடைவில் இந்த நஷ்டமும் சரிசெய்யப்படும்.
கேள்வி : இம்மாதிரியான சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்குமே?
படப்பிடிப்பு தளத்தில் உணவு என்பது மிக முக்கியமான ஒரு விஷயம். நாங்கள் உணவகத்தில்தான் எப்போதும் ஆர்டர் எடுக்க வேண்டும் என்று ஒரு விதி இருந்தது. ஆனால், இன்றைய சூழ்நிலையில் உணவகத்துக்குச் சென்று அங்கு சுகாதாரம் எப்படி உள்ளது என்று பார்வையிடுவதற்கு நேரம் இல்லை. ஆகையால் பெஃப்சிக்கு ஒரு கோரிக்கை வைத்தோம். மூன்று மாதங்களுக்கு தயாரிப்பு நிர்வாகமே உணவு ஏற்பாட்டை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டிருந்தோம். அதற்கு பெஃப்சி நிர்வாகம் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் படப்பிடிப்பு தளத்திலேயே உணவு தயாரிப்பது என்று முடிவு செய்துள்ளோம். இந்த உணவு தொழிலாளர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களாகவே வீட்டிலிருந்து உணவு கொண்டுவர அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க... ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடங்கிய சீரியல் படப்பிடிப்பு!