நாம் ஏற்கனவே முந்தைய பகுதிகளில் பார்த்ததுபோல் ஆஸ்கர் விழா பல சர்ச்சைகளை உள்ளடக்கியது. இந்த சர்ச்சைகளில் முக்கியமான ஒன்று, சிறந்த திரைப்படங்களை அங்கீகரிக்கத் தவறுவது. ஒரு திரைப்படம் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றபோதும் அது ஆஸ்கரை வெல்லாமல் போக பல காரணங்கள் கூறப்படுகிறது.
இருந்தபோதும் ஆஸ்கர் தவறவிட்ட திரைப்படங்களை பார்க்கும்போது, எப்படி இந்த திரைப்படங்கள் விருதுகளை தவறவிட்டன என வியக்கவைக்கிறது. கீழ் காணும் ஐந்து திரைப்படங்கள் ஒரு ஆஸ்கர் விருதையும் வெல்லவில்லை என்பது நிச்சயம் உங்களை ஆச்சரிப்படுத்தும்.
1. கிங் காங் -king kong (1933)
50 அடி உயர மனிதக் குரங்கு நியூயார்க் எம்பயர் பில்டிங் மீது ஏறுவது, டைனோசருடன் சண்டை போடுவது, பெரிய சைஸ் அனகோண்டாவுடன் சண்டைபோடுவது என 1930-களில் எட்டமுடியாத உயரங்களை காட்சிப்படுத்தி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.
கிங்காங் திரைப்படங்களின் வரிசையில் முதல் திரைப்படமான இது 1932-ல் வெளியாகி சக்கைபோடு போட்டது. இத்திரைப்படம் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1952-ம் ஆண்டு வரை திரையரங்குகளில் திரையிடப்பட்டுவந்தது.
வி.எஃப்.எக்ஸ். (vfx), ஸ்பெஷல் எஃபெக்ட்களில் (special effect) பல்வேறு சாதனைகளை செய்த இத்திரைப்படம் அஸ்கர் விருதுகளில் ஒன்றைக் கூட வெல்லவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. 1930-களில் வி.எஃப்.எக்ஸ்., ஸ்பெஷல் எஃபெக்ட்டுக்கான விருது கேட்டகிரி ஒன்று அன்று இல்லாததே இதற்கு காரணம்.
2. மாடர்ன் டைம் - Mordern Times (1936)
டெர்பி தொப்பி, சின்ன மீசை, உருவத்துக்கு பொருந்தாத பெரிய சைஸ் ஷூ, பேகி பேன்ட் கையில் ஒரு தடி. உலகின் மிக உன்னத கலைஞன் சார்லி சாப்ளின் கடைசி முறையாக திரையில் தோன்றிய திரைப்படம்.
1930-களில் நிலவிய வேலையில்லா திண்டாட்டம், பஞ்சம், வறுமை என ஒட்டுமொத்த மக்களின் குரலையும் பதிவு செய்தது அந்தத் திரைப்படம். அநேக காட்சிகள் மக்களின் அன்றாட கஷ்டங்களை சாப்லினுக்கே உரிய பாணியில் பதிவு செய்தது இந்த திரைப்படம். முதலாளித்துவத்தின் கோரத்தை இந்த திரைப்படம் பிடித்துக் காட்டியது. இத்தனை சிறப்புகள் இருந்தும் ஏனோ ஆஸ்கர் விருது குழு இந்த திரைப்படத்தை தவிர்த்துவிட்டது.
3.ரியர் விண்டோ - Rear Window (1954)
கால் உடைந்த ஒரு பத்திரிகையாளர் தன் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருக்கிறார். தன் நர்ஸும் அவரது காதலியையும் தவிர யாரும் அவரை பார்க்க வராததால் தனிமையை உணர்கிறார். அந்த தனிமையை போக்கவே முற்றத்தின் சாளரம் (ஜன்னல்) வழியே பக்கத்து பிளாட்டை நோட்டம் விடுகிறார். இப்படி நோட்டம் விட்டுக்கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டில் நடக்கும் கொலையை துப்பறிகிறார். அடுத்தடுத்து நகரும் காட்சிகளை மிகவும் விறுவிறுப்பாக அமைத்திருப்பார் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்.
சிறந்த திரைக்கதை, இயக்குநர், ஒளிப்பதிவு, சிறந்த ஒலிப்பதிவு ஆகிய நான்கு பிரிவுகளில் தேர்வுபெற்றபோதும் ஒரு பிரிவில்கூட இப்படம் வெற்றி பெறவில்லை.
4. டெர்மினேட்டர் -Terminator (1984)
டைட்டானிக் புகழ் ஜேம்ஸ் கேமரூனின் முதல் திரைப்படமான டெர்மினேட்டர் 1984-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. தொழில்நுட்பத்திலும் கதையமைப்பிலும் மிகவும் முன்னோடியாக அக்காலத்தில் கருதப்பட்டது.
கமர்ஷியல் வெற்றி மட்டுமின்றி விமர்சகர்களின் நன்மதிப்பையும் பெற்றது. ஆஸ்கர் விருதுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் கூட இப்படம் ஆறு பிரிவுகளில் தேர்வாகியும் ஒரு விருதை கூட தட்டிச் செல்லவில்லை. குறிப்பாக எதிர்காலத்தைச் சேர்ந்த ரோபாவாக இறுக்கமான நடிப்பை வெளிப்படுத்தியபோதும் விருது குழுவால் (ARNOLD SCHWARZENEGER) தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்கு முக்கியமாக கூறப்படும் காரணம் யாதெனில், அர்னால்டு ஆஸ்டிரிய நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்; அதுதான் தேர்ந்தெடுக்கப்படாததற்கு காரணமாம்.
5. தி ஷஷாங் ரிடம்ஷன் -The Shawshank Redemption (1994)
பிரபல திரைக்கதை ஆசிரியரான பிராங்க் டேரபான்டு இயக்குநர் அவதாரம் எடுத்த முதல் திரைப்படம் இதுவே. 90-களின் ஆரம்பத்தில் 'டைட்டானிக்', 'மம்மி', 'ஜூராஸிக் பார்க்' என பிரமாண்ட திரைப்படங்கள் வலம் வந்தபோது 90 சதவிகித திரைக்கதையும் ஒரு சிறைச்சாலைக்குள்ளேயே அமைக்கப்பட்டு விறுவிறுப்பு குன்றாமல் எடுக்கப்பட்ட படமே 'தி ஷஷாங் ரிடம்ஷன்'. இரட்டை கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஆண்டி டுப்ரெஸ்னேவை ஒட்டி நகரும் கதை. இப்படத்தின் திரைக்கதைக்காகவும், மார்கன் ஃப்ரிமேனின் அபாரமான நடிப்பிற்காகவும் மிகுந்த பாராட்டையும் பெற்றது. ஆறு பிரிவுகளில் விருதுக்கு இத்திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டபோதும் ஒரு விருதை கூட கைப்பற்றவில்லை.