25ஆவது க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் வழங்கும் விழாவில் பிரபல இயக்குநர் குவாண்டின் டரண்டினோவின் ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது. மேலும் நடிகர் ப்ராட் பிட் சிறந்த துணை நடிகருக்கான விருதினை வென்றுள்ளார்.
ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் திரைப்படம் பெருவாரியான ஆஸ்கர் விருதுகளை அள்ளும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், தற்போது மூன்று க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகளை அள்ளியிருப்பது திரையுலக ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்திரைப்படம் ஏற்கனவே நடந்து முடிந்த கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த இசை, சிறந்த நகைச்சுவை, சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த துணை நடிகர் ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி உலகைப் பொருத்தவரை, ஃப்ளீபேக் (Fleabag) தொலைக்காட்சித்தொடர், இந்த வருடத்திற்கான சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான விருதினையும், இத்தொடரில் நடித்த ஃபீபி வாலர் - ப்ரிஜ் (Phoebe Waller-Bridge) நகைச்சுவைத் தொடருக்கான சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்றுள்ளார்.
இவைதவிர, கோல்டன் க்ளோபில் ஜோக்கர் (Joker), ஜூடி (Judy) திரைப்படங்களுக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை அள்ளிய நடிகர் வகீன் ஃபீனிக்ஸும் (Joaquin Phoenix), ரெனே ஸெல்விகரும் (Renee Zellweger) க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகளை அள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோல்டன் ஈகிள் விருதுக்கு 3 ஹாலிவுட் படங்கள் போட்டி