கரோனா வைரஸ் பாதிப்பால் 72 நாள்களாக தொலைக்காட்சித் தொடர்கள், சினிமா படப்பிடிப்பு என எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், அரசு சில நிபந்தனை தளர்வுகளுடன் மெகா தொடர்களின் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தது.
இதனை அடுத்து 72 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கின. படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகை, ஊழியர்களுக்கு கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களோடு முழு பரிசோதனைக்குப்பின் கடந்த 10ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சென்னையில் தொடர்ச்சியாக கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையில் 12 நாள்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சின்னத்திரை படப்பிடிப்புகள் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் 19ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெறாது என்று சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'சென்னையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தமிழ்நாடு அரசு இவ்வளவு கடுமையாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த இருப்பதால், இதை நாங்களும் பின்பற்றப் உள்ளோம்.
இந்த சூழ்நிலையில் நாங்கள் அரசிடம் படப்பிடிப்பு தொடர்ந்து நடத்த அனுமதி கோருவது என்பது ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும். ஆகையால், வரும் 18ஆம் தேதி வரை சின்னத்திரை படப்பிடிப்புகள் நடைபெறும். பத்தொன்பதாம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சின்னத்திரை தொடர்பான எந்த படப்பிடிப்புகளும் நடைபெறாது.
பெஃப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். இதுவரை கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 18ஆம் தேதி வரை எட்டு நாள்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இதில் ஒரு ஞாயிற்றுக்கிழமை, இரண்டாம் ஞாயிறு என்பதால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. ஆக மொத்தம் ஏழு நாள்கள் மட்டுமே சுமார் 25 மெகாத்தொடர்களுக்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
ஆக ஒரு மெகாத்தொடர் படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசு 60 பேரை அனுமதித்தது என்றாலும் 1,500 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். மீண்டும் ஊரடங்கு உத்தரவால் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்' என்றார்.
இதையும் படிங்க... 'தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம்தான் ஆனால் வேலை வாய்ப்புகள் வழங்க முடியும்' : சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பேட்டி