சென்னை: சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைப்பெற்றன. இந்த நிகழ்ச்சியில் பணியாற்றி வந்த பணியாளர்கள் 6 பேருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தபட்டனர்.
தமிழ்நாட்டில் தற்போது முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில், எந்தவித படப்பிடிப்பும் மே 31ஆம் தேதி வரை நடைபெறாது என ஃபெப்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.கே. செல்வமணி அறிவித்து இருந்தார். மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பில் இருந்த ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இரு வாரங்களுக்கு படப்பிடிப்பு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த விதிமுறைகளை மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி மீறியுள்ளது.
பிக்பாஸ் நிகிழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து, பூந்தமல்லி உதவி கமிஷனர் சுதர்சன், தாசில்தார் சங்கர் உள்ளிட்ட வருவாய் துறையினர் பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெறும் அரங்கிற்கு சென்று நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக அந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிர்வாகத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்பின் மாவட்ட ஆட்சியருடன், வருவாய்த் துறையினர் ஆலோசனை நடத்தி பிக்பாஸ் அரங்கை சீல்வைக்க முடிவு செய்தனர். இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்த 7 நடிகர்கள், நடிகைகள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு அங்கு அவர்களை தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், பிக்பாஸ் அரங்கில் இருந்த 60 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின் பிக்பாஸ் அரங்கத்தின் மூன்று நுழைவாயிலுக்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர். ஈவிபி ஃபிலிம் சிட்டிக்கே சீல் வைக்க அலுவலர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சர்ச்சைகளுடன் வெளியான 'தி ஃபேமிலி மேன் 2' ட்ரெய்லர்!