வாஷிங்டன்: சின்னத்திரை ஆஸ்கர் என்று அழைக்கப்படும் எம்மி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டில் புதுமையான முயற்சியாகக் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்படவுள்ளது.
கரோனா பரவல் காரணமாக ஆண்டுதோறும் நிகழும் வழக்கமான நிகழ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 72ஆவது எம்மி விருதுகள் இந்த ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமான பாணியில் இல்லாமல் காணொலிக் காட்சி மூலம் புதுமையான முறையில் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பட்டியல் நேற்று (ஜூலை 29) வெளியிடப்பட்டது. இதையடுத்து 72ஆவது எம்மி விருது வழங்கும் நிகழ்வு காணொலிக் காட்சி மூலம் நடத்தப்படவுள்ளது எனவும், போட்டியாளர்கள் தங்களது வீடுகளிலோ அல்லது விருப்பமான இடங்களிலோ விரும்பியவர்களுடன் பங்கேற்கலாம் என்று கூறி பரிந்துரை பட்டியலில் இருப்பவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், ”செப்டம்பர் 30ஆம் தேதி எம்மி விருதுகளைப் பெறுவதற்கு லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள மைக்ரோசாப்ட் தியேட்டருக்கு வருமாறு யாரும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஏனென்றால், தொலைக்காட்சி துறையின் முக்கிய நிகழ்வான இந்த நிகழ்ச்சி காணொலிக் காட்சி மூலம் நடத்தப்படவுள்ளது.
நீங்கள் உங்களது வீட்டிலோ, விரும்பிய இடத்திலோ, நெருக்கமானவர்களுடன் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். உங்களைச் சிறந்த முறையில் படம் பிடிப்பதற்கு ஏதுவாக தொழில்நுட்பக் கலைஞர்களை ஏற்பாடு செய்கிறோம். இந்த ஆண்டில் முற்றிலும் புதுமையான அனுபவத்தை உங்களுக்கு அளிக்கவுள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள தொலைக்காட்சி அகாதமி சார்பில் ஆண்டுதோறும் எம்மி விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. சின்னத்திரை ஆஸ்கர் என்று அழைக்கப்படும் எம்மி விருதுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறந்த நிகழ்ச்சி, தொடர்கள் மற்றும் அதில் இடம்பெறும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியங்கா சோப்ரா உதவி!