சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற 'தண்டகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் திரைப்படத் துறையை ஒரு வரைமுறை படுத்துவதற்கான யுக்தியைக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, "ஒரு படம் திரைக்கு வரும் போது அதன் டிக்கெட் விலை 100 ரூபாய் என்றால், அதில் 30 ரூபாய் தயாரிப்பாளருக்கும் 30 ரூபாய் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் 40 ரூபாய் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் செல்ல வேண்டும். இதுபோன்ற ஒரு கட்டமைப்பை கொண்டு வர நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று படவேண்டும். ஒரு நடிகருக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம் என்றால், பத்து லட்சம் ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டு, அதன் பிறகு படத்தில் வரும் வசூலில் இருந்து 90 லட்சம் ரூபாயை அந்த நடிகரிடத்தில் ஒப்படைப்பதற்கு நடிகர்களும் ஒத்து வர வேண்டும். இந்த முறையை கடைப்பிடிப்பதாலேயே, ஆங்கிலப் படங்கள் குறைந்த பணத்தைப் போட்டு நிறைந்த லாபத்தை பெறுகின்றன.
திரை உலகில் ஏராளமான சங்கங்கள் இருந்தும் அவை செயல்படாமலும் குழப்பங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. அவையே நடிகர்களுக்கான பெரிய டென்ஷனாக இருக்கிறது. மிகப்பிரபலமான நடிகர்கள், தான் நடித்த படம் நன்றாக ஓடினால் போதும் என்ற எண்ணத்தை தவிர்த்தால் மட்டுமே தமிழ்த் திரை உலகம் சரிப்படும்" என்றும் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசினார்.