உலகளவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்த நாடுகளுக்கு பல்வேறு தொழிலதிபர்கள் உதவிக்கரம் நீட்டிவருகின்றனர். வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தவும், சிகிச்சைக்காவும் முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றைத் தானமாக வழங்கி வருகின்றனர்.
சீனாவின் ஜாக் மா, அமெரிக்காவின் பில் கேட்ஸ் உள்ளிட்ட தொழிலதிபர்கள் தொடங்கி பலர் உதவிவரும் நிலையில், இந்தியாவில் எந்த பெரு நிறுவன முதலாளிகளும் உதவ முன்வரவில்லை என கடந்த இரு நாள்களாக விமர்சனம் எழுந்தது.
கரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் தற்போது தீவிரமாக அதிகரித்துவருகிறது. அந்நாட்டில் கரோனாவால் இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 348 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பிரபல பாப் பாடகி ரிஹானா, கரோனா தொற்றை தடுக்கும் முயற்சிக்கு பண உதவி செய்துள்ளார்.
ரிஹானா தனது அறக்கட்டளையான கிளாரா லியோனல் மூலம் 5 மில்லியன் டாலரை வழங்கியுள்ளார். இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ 37.8 கோடி ஆகும். இந்த நன்கொடை குறித்து அறக்கட்டளை, இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வர எடுக்கப்படும் முயற்சிக்கு இப்பணம் கொஞ்சம் உதவும். ஆராய்ச்சி, சுகதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்டவைகளுக்காக இது வழங்கப்படும். நாம் இப்போது இந்த உலகத்தையும் சமூகத்தையும் பாதுகாக்க விரைவாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.