மும்பை: 1970களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த பர்வீன் பாபியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வெப் சீரிஸில் நடிகை அமலாபால் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலிவுட் முன்னணி இயக்குநரான மகேஷ் பட் கடந்த 2019 டிசம்பர் மாதம் புதிய வெப் சீரஸ் மூலம் டிஜிட்டல் தளத்தில் களமிறங்க இருப்பதாக அறிவித்தார். அப்போது, முன்னணி நடிகையாகத் திகழும் ஒருவருக்கும், திரையுலகில் வெற்றியை எதிர்நோக்கி போராடி வரும் இயக்குநருக்கும் இடையேயான உறவை மையப்படுத்தி இந்தத் தொடர் இருக்கும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நடிகை பர்வீன் பாபியை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு உலா வந்த செய்தியை வைத்து இயக்குநர் மகேஷ் பட் வெப் சீரிஸ் இயக்கவிருப்பதாக பேசப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க, தற்போது பெயரிடப்படாத இந்த வெப் சீரிஸில் நடிகை அமலாபால் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகேஷ் பட் தரப்பினர் அமலாபாலிடம் வெப் சீரிஸ் தொடர் குறித்து விவாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
1970களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பர்வீன் பாபி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அமலாபால் கேரக்டர் அமைந்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
முன்னதாக, இதேபோன்றதொரு கதையை கங்கனா ரணாவத் - ஷைனி அஹுஜா நடிப்பில் 2006ஆம் ஆண்டு 'வேஹ் லம்ஹே' என்ற பெயரில் படம் எடுத்திருந்தார் இயக்குநர் மகேஷ் பட். இதைத்தொடர்ந்து தற்போது வெப் சீரிஸ் எடுக்கவுள்ளார்.