வெண்ணிலா கபடி குழு- 2 படத்தில் விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜூலை 12ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்க, செல்வசேகரன் இயக்கியுள்ளார்.
வேலையில் சஸ்பென்ஷன் என ஊதாரித்தனமான அப்பாவாக பசுபதி. தென்றல் கேசட் கடை ஒரு பக்கம், காதல் ஒரு பக்கம், பொறுப்பற்ற அப்பா மீது சலிப்பு ஒரு பக்கம் என நல்ல பிள்ளையாக வளர்கிறார் விக்ராந்த். ஒரு கட்டத்தில் வேலையை இழந்த நிலையில் தன் மனைவியின் நகைகளை விற்று வாங்கிய அம்பாஸடர் காரை நண்பனுக்காக விற்கிறார் பசுபதி. இதனை அறிந்து ஏக வசனத்தில் பசுபதியை வசைபாடும் விக்ராந்திற்கு, தன் தாய் மூலம் தனது தந்தை மிகப்பெரிய கபடி வீரர் என்பது தெரிய வருகிறது.
'வெண்ணிலா கபடி குழு' கேப்டனாகவும் இருந்தவர் என்றும், விக்ராந்திற்காக தான் கபடியையும், சொந்த ஊரையும் விட்டு குடும்பத்தோடு வெளியேறினார் எனத் தெரிந்து மனம் வருந்துகிறார் விக்ராந்த். கபடி பிடிக்காத விக்ராந்த் எப்படி கிராமத்திற்கு சென்று, மாஸ்டர் கிஷோரை சந்தித்து கபடியில் விளையாடுகிறார். அவரை சந்தித்த பின்பு அப்பாவின் கனவை நனவாக்குகிறாரா என்பது தான் மீதிக்கதை. முதல் பாதி முழுவதும் புரோட்டா சூரி, அப்புக்குட்டி ஆகியோருடைய நகைச்சுவையுடன் மிகவும் மெதுவாக படம் நகர்கிறது. இரண்டாவது பாதியில் கபடி போட்டி, வெற்றி, தோல்வி, காதல் என்று வேகமாக நகர்ந்தாலும் வெண்ணிலா கபடி குழுவின் முதல் பாகம் போல் இரண்டாம் பாகம் இல்லை என்பதே உண்மை.
இப்படத்தில் விக்ராந்திற்கு ஜோடியாக அர்த்தனா பினு நடித்துள்ளார். கிராமத்து பெரிய வீட்டு பெண்ணாக நடித்திருக்கிறார். காதல் கதை கூட முதல் பாகம் போல் இதில் இல்லை என்று தான் கூற வேண்டும். படத்தில் வரும் கபடி போட்டிகளும் சினிமாத்தனம் போலவே அமைந்திருந்தன. பாடல்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை. பத்து வருடங்களுக்கு பிறகு வந்துள்ள இப்படம், எதிர்பார்த்த அளவு இல்லை என்பதே நிதர்சனமானது. ஒரு படம் எடுக்கப்பட்ட பின் அதனுடைய இரண்டு, மூன்று என பாகங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தாலும், முதல் பாகம் போல் எதுவும் அமைந்துவிடாது என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. மொத்தத்தில் வெண்ணிலா கபடி குழு 2 படம், முதல் பாகத்தை பார்க்க தூண்டியுள்ளது என்பதில் மட்டுமே வெற்றி அடைந்திருக்கிறது.
மொத்தத்தில் பரபரப்பும், சுவாரஸ்யம் இல்லாத இரண்டாவது ஆட்டம்.