கல்யாண் இயக்கத்தில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி, ஆனந்த் பாபு, மன்சூர் அலிகான், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த படம் 'ஜாக்பாட்'.
திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு காலம்போன போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஜோதிகா, ரேவதி. அதில் ஒரு கட்டத்தில் இருவரும் சிறைக்குச் செல்கின்றனர். அங்கு சச்சு அறிமுகமாகிறார்; அவர் ஒரு அக்ஷய பாத்திரம் பற்றி கூறவும், அதை எடுக்க ஜோ, ரேவதி பல முறை முயற்சித்தும் எடுக்க முடியாமல் போக அது இறுதியில் அவர்களுக்கு கிடைத்ததா என்பதே கதை.
இதேபோல் படத்தின் உள்கதைகள் இரண்டு உள்ளன. அதில் ஒன்று, ரேவதி மீது ஒருதலைக்காதல் வயப்பட்டு அவருக்காக உதவுகிறார் மொட்டை ராஜேந்திரன். ஆனால் அவரது காதல் கைகூடுமா? மற்றொன்று, தனது இளமை பருவத்தை இழக்கும் யோகிபாபு மீண்டும் அப்பருவத்திற்கு திரும்பினாரா? என்பதே.
படத்தில் பல இடங்களில் ஆக்ஷன் காட்சி, சிலம்பம் ஆகியவற்றில் அதிரடி கிளப்பியிருக்கிறார் ஜோதிகா. தேவையற்ற சண்டை காட்சிகளை இயக்குநர் வைத்திருக்கிறாரோ என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. 25 வயதில் செய்ய வேண்டியதை தற்போது செய்திருப்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் பெண்களின் பாராட்டுகளை பெறுவதை சற்று இழந்துவிட்டாரோ என்ற கேள்வியே எழுகிறது.
இருந்தும்கூட படத்திற்காக சிலம்பம், திருமணத்திற்கு பிறகு சண்டை காட்சிகளில் அசத்தலான நடிப்பு, உழைப்பு என தன்னையே படத்திற்காக மெருகேற்றியிருக்கிறார் ஜோதிகா. ரேவதி, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவை காட்சிகள் சிறப்பானதாகவே அமைந்திருக்கிறது. ஆனந்த் பாபுவின் இரண்டு வித்தியாசமான தோற்றம், அவருடை நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
பின்னணி இசையில் விஜய் சந்திரசேகர் ஆறுதல் அளிக்கிறார். நகைச்சுவை காட்சிகள், மொட்டை ராஜேந்திரனின் காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என்று வெரைட்டி கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார். 'குலேபகாவலி' இயக்கத்திற்கும் 'ஜாக்பாட்டிற்கும்' பெரிய வித்தியாசம் இல்லை.
இரண்டிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் மற்றபடி இரண்டும் ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு ஒரே கதையம்சங்கள்தான் என்று கூறுகிறது ரசிகர்கள் பட்டாளம். படத்திற்கு தேவையற்ற மாஸ் சீன்களை குறைத்திருந்தால் தாய்க்குலங்களின் ஆதரவை சற்று அதிகமாக பெற்றிருப்பார் ஜோதிகா. ரசிகர்களின் மனதில் எதிர்பார்த்த இடத்தை ஜாக்பாட் பிடித்ததா என்றே சிந்திக்கத் தூண்டுகிறது.