'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து, 'தல' அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடித்துவருகிறார். 'வலிமை' என்று பெயர் வைக்கப்பட்ட இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. இதுவரை படப்பிடிப்பில் 50 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 'வலிமை' படத்தில் 'தல' அஜித்துடன் ஹூமா குரேஷி, யோகி பாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு இசையினை யுவன் சங்கர் ராஜா அமைக்க, ஒளிப்பதிவினை நிரவ் ஷா கையாள பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தைப் பிரமாண்டமாகத் தயாரித்துவருகிறார்.
இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா மூன்று பாடல்களும் ஒரு சிறிய தீம் மியூசிக்கும் உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
'வலிமை' படத்தில் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு கிட்டார் பயன்படுத்தாமல் மாஸான ஒரு தீம் மியூசிக்கை யுவன் சங்கர் ராஜா உருவாக்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக்ஷன் காட்சிகளுடன் குடும்ப சென்டிமென்ட், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து அம்சங்களும் இருப்பதால் படத்தை தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளில் டப் செய்து இந்தியா முழுவதும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.