ஒய் நாட் ஸ்டூடியோஸ் - ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து வழங்கும் படம் 'ஏலே'. வால் வாட்ச்சர் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர். 'பூவரசம் பீப்பி', 'சில்லுக்கருப்பட்டி' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்த ஹலிதா சமீம் இப்படத்தை இயக்கியுள்ளார்.
சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி உள்பட பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கேபெர் வாசுகி, அருள்தேவ் இசையமைத்துள்ளனர். ரேமண்ட் டெரிக் கிரஸ்டா எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் இப்படத்தின் இயக்குநர் ஹலிதா சமீம், நடிகர்கள் சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட படக்குழுவினர்கள் பங்கேற்றனர். இப்படம் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகிறது. இந்த விழாவில் பேசிய ஹலிதா சமீம், எனது முதல்படமாக எடுக்க யோசித்த கதைதான் இது. ஆனால் இப்போதுதான் எடுக்க முடிந்தது என்றார்.
இதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனி பேசுகையில், படப்பிடிப்புக்குச் சென்றபோது முதல் எட்டு நாள்கள் என்னைச் சடலமாகப் படுக்கவைத்துவிட்டார்கள். வசனமே இல்லாமல் எட்டு நாள்கள் பிணமாகப் படுத்தே இருந்தேன். நல்லதொரு திறமையாளர் ஹலிதா சமீம். அவர் சிரித்துக்கொண்டே சாமியாடி வேலை வாங்கிவிடுவார் என்றார்.
பின் நடிகர் மணிகண்டன் பேசுகையில், ஹலிதா சமீம், அனைவருடைய ஒத்துழைப்போடும் படம் நன்றாக வந்துள்ளது. இதில் பணியாற்றிய பெரும்பாலான கலைஞர்கள் புதியவர்கள், ஆனால் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர் என்றார்.