கன்னட திரையுலகிலிருந்து 2018ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியான படம் 'கேஜிஎஃப்'. பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்தார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான சில நாள்களிலேயே ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த வரைகலை (Vfx) ஆகிய இரண்டு பிரிவுகளின் தேசிய விருது பெற்றது.
இப்படத்தின் முதல் பாகம் அடைந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. கருடன் கொல்லப்பட்டதற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்கிற கதையாக இரண்டாம் பாகம் உருவாகிறது. இதில் கருடனின் அண்ணனாக சஞ்சய் தத் 'ஆதிரா' கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்காக கோலார் தங்கவயல் அருகே உள்ள சியானிடே மலைப்பகுதியில் செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதற்கிடையில் கரோனா தொற்று அச்சம் காரணமாக, சிறிது காலம் நிறுத்தப்பட்டிருந்த படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் நடைபெற்று முழுவதுமாக நிறைவுற்றுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கி இருக்கும் இப்படத்தின் டீஸர், யாஷ் பிறந்த நாளன்று வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘கேஜிஎஃப்2’ இந்தாண்டு ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். இதனையடுத்து யாஷின் ரசிகர்கள் கேஜிஎஃப் 2 வெளியாகும் தேதியை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதம் தற்போது சமூகவலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அந்த கடிதத்தில், "அதிகம் எதிர்பார்க்கப்படும் 'கேஜிஎஃப் 2' ஜூலை 16ஆம் தேதி வெளியாகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த படத்தை பார்க்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே படம் வெளியாகும் தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தயவு செய்து எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். இது படம் அல்ல எங்கள் எமோஷன்" என்று தெரிவித்துள்ளனர்.