நா. முத்துக்குமார் இந்தப் பெயரை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இவர் குறித்தும், இவரின் தமிழ், சிந்தனை, எளிமை குறித்தும் எப்போதும் அவரது ஒரு பிறந்த நாளில் எழுதித் தீர்த்துவிட முடியாது. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எழுத வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு பிறந்தநாளிலும் அவரைப் பற்றி எழுதும்போது தமிழும் மனிதனும் ஒரு முறை பிறக்கிறார்கள். ஒரு பாடலில் ஓராயிரம் சிந்தனைகளைத் தூவி அமைதியாக நம்மைக் கடந்திருக்கிறார். அவரைப் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் அதுதான் அவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவர் மக்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் சொத்து அப்படி.
பாடல்களுக்குள் புதுக்கவிதையை புகுத்தியது வைரமுத்து என்றால்; பாடலுக்குள் எளிய கவிதையை புகுத்தியவர் நா. முத்துக்குமார். கவிதைகள் எப்போதும் அதிமேதாவிகளுக்கானது என பலர் நினைத்திருந்த சமயத்தில் தனது வருகை மூலம், கவிதை என்பது அனைத்து தரப்பினருக்குமானது என்பதை தனது எளிய தமிழால் பொட்டில் அடித்துச் சொல்லியவர் முத்து. ஏனென்றால் அவரது பாடல் வரிகள் கலிஃபோர்னியாவில் இருக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினியருக்கும் புரியும், கன்னியாகுமரியின் மீனவருக்கும் புரியும்.
ஒரு கவிஞன் என்பவன் யாருக்கானவன், கவிதை யாருக்கானது என அனைவரும் தலையைப் பிய்த்து திரிந்து கொண்டிருந்த சமயத்தில், நமக்கானது கவிதை, நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர் கவிஞன் என சொல்லியவர் அவர்.
ஏனென்றால் அவரது முகமும், குணமும், வரிகளும் அப்படி. அதற்கு காரணம் அவரது தந்தையும், தாயுமானவருமாகிய நாகராஜன். ’சந்தை’ என்ற கதையை எழுதி தந்தையிடம் முத்து கொடுத்தபோது, அதை படித்துவிட்டு மறுநாள் காலை காய்கறிச் சந்தையில் முத்துவை இறக்கிவிட்டு, சந்தைக்குள் சென்று நன்றாகச் சுற்றிப்பார்த்துவிட்டு வா.. நீ எழுதிய கதைகளில் உண்மையான காய்கறிச் சந்தை இல்லை. காய்கறி வாசம் இல்லை என்றிருக்கிறார். இதுதான் அவரது எழுத்துக்களுக்குள் நம்மை அறியாமல் நம்மைக் கடத்திச் செல்லும் வித்தைக்குக் காரணம். அவர் ஒரு கடத்தல்காரன்.
பேரன்பின் ஆதி ஊற்றுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஒரு மனிதனுக்கு புறச் சிக்கல்களை விடவும் அகச் சிக்கல்கள் அழியாத வடுவை தந்து ’தொலையும்’. நாட்கள் நரகத்தில் நகர்வது போல் நகர்ந்தே கொல்லும். அப்போது நமக்குத் தேவை ஒன்றே ஒன்றுதான். நமது மனதுக்கு ஒரு மடி. அப்படிப் பார்க்கையில் நம்மின் பல அகச் சிக்கல்களுக்கு மடி கொடுத்த தாயுமானவர் நா. முத்துக்குமார். அவரது மடி ஏற்றத்தாழ்வு பார்க்காது, வேற்றுமை பார்க்காது, நமது சோகத்தை எள்ளி நகையாடாது, பயன்படுத்திக் கொள்ளாது. அள்ளி உள்ளே வைத்து நமது கண்ணீர் தீரும் வரை ஆசுவாசப்படுத்தும்.
இந்த சமூகத்தில் ஆண், பெண் நட்பு என்பது காதலில் முடியுமா? காமத்தில் முடியுமா? எதுவும் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்கும். ஆம், நட்பா, காதலா, காமமா, தேடலா, வழி முழுக்க வரப்போகும் துணையா, வாழ்வு முழுக்கத் தூறப் போகும் மழையா - இப்படி எதுவுமே தெரியாத ஒரு உறவுமுறையை முத்து இப்படிச் சொல்கிறார்,
“உன்னை தோழி என்பதா
என் பாதி என்பதா
இதை காதல் என்பதா
என் தேடல் என்பதா
ஒரு மேகம் போலவே
மனம் மிதந்து போகுதே
மழை நின்ற போதிலும்
மரக்கிளைகள் தூறுதே”. ’காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் மொத்த கதையும் இந்த வரிகள்தானே.
முக்கியமாக, ”மழை நின்ற போதிலும் மரக்கிளைகள் தூறுதே” என்ற வரி கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும் அதை நிச்சயம் யாராலும் எழுத முடியாது. இது அவரது ரசிகன் என்று எழுதவில்லை. உண்மையில், நம்மை சுற்றியிருக்கும் மரக்கிளைகள் மழை நின்றுவிட்டபோதிலும் தூறிக்கொண்டுதான் இருக்கின்றன. அதனை நாம் கவனிக்க மறந்திருப்போம். அதை கவனித்து சிறு சிறு கவனிப்புகளில் அனைத்தும் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் மீட்டுக் கொடுத்திருக்கிறார்.
”என்னை எரித்தால் எலும்புக் கூடும் உன் பெயர் சொல்லி அடங்குமடி” என்று 7ஜி திரைப்படத்தில் அவர் எழுதிய வரிகளில்தான் எவ்வளவு பெரிய வெறி பிடித்த காதலன் இருக்கிறான். ”தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இலை படகு ஆனதே” என அவர் கற்றது தமிழில் எழுதிய வரிகளில் எவ்வளவு தன்னம்பிக்கையை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் இருக்கிறார். இப்படி அவரது பாடல்கள் அனைத்தும் நமக்கு ஏதோ ஒன்று சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
நினைவில் சேர்ந்திருப்போம்... யுவனும் முத்துவும் இசையின் நட்பு! #HBDyuvan
”சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை” என்ற வரிகளை எழுத அவர் எவ்வளவு ஆழமானவராக, உன்னிப்பாளராக இருந்திருக்க வேண்டும். நம்மால் புல்லையே கவனிக்க முடியவில்லை. கேட்டால் அதை கவனிக்க எங்கு நேரமிருக்கிறது என்று சொல்லிவிட்டு ஓடிக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் சொல்லப்போனால் மிகவும் பரபரப்பாக இருந்தவர் முத்துக்குமார். அப்படிப்பட்ட முத்துக்குமார்தான் புல்லையும் அதன் மேல் உறங்கும் பனியையும் அதில் தெரியும் மலையையும் கவனித்திருக்கிறார் . அவர் வேடிக்கை பார்த்தவர். வேடிக்கைதான் ஒரு மனிதனுக்கு பல அனுபவங்களைத் தரும். அதை முழுமையாக உணர்ந்து செய்தவர் முத்து.
முத்து, காஞ்சியின் அருகில் பிறந்த ஒரு கிராமத்துக்காரர், அவரால் தென் தமிழ்நாட்டு வெயில், வாழ்வியல் குறித்து எப்படி எழுத முடிந்தது என இன்றுவரை அனைவரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், எல்லா கிராமத்துக்காரர்களுக்கும் உணர்வு ஒன்றுதானே. இதுவரை அவர் எழுதிய ’வெயிலோடு விளையாடி’ திரைப்பாடலை அனைவரும் கொண்டாடித் தீர்த்து விட்டோம். இருப்பினும் காதல் திரைப்படத்தில் அவர் எழுதிய ”தண்டட்டி கருப்பாயி” என்ற பூப்பெய்தலுக்கான பாடலை எப்படித் தவறவிட்டோம் என்று தெரியவில்லை.
நமது சமூகம் கொண்டாட்டங்களாலும், பாடல்களாலும் ஆனது. அதிலும் மதுரை போன்ற தென் மாவட்டங்களில் ஒரு விழா என்றால் கொண்டாட்டம் வெட்கப்படும் அளவுக்கு கொண்டாட்டம் இருக்கும். இந்த ”தண்டட்டி கருப்பாயி” பாடலும் மதுரையில் நிகழும் ஒரு அதீத கொண்டாட்ட பாடல். இதனை முத்துக்குமார் எழுதினாரா என்பது பெரிய ஆச்சரியம். ஏனெனில் எல்லா கிராமத்துக்காரர்களுக்கும் உணர்வு ஒன்று. ஆனால் எல்லா நகரத்துக்காரர்களின் வாழ்வு முறையும் ஒன்று கிடையாதே.
இந்த பாடல் இடம்பெறுவது மதுரையில் ஒரு பெண் பூப்பெய்திய பிறகு நடக்கும் கொண்டாட்டம் குறித்தது. காஞ்சியில் பிறந்து மதுரை வாழ்வியலை எழுதுவது நிச்சயம் கடினம். அதுவும் அந்த பாடலின் பெரும்பகுதியை மதுரை வட்டாரச் சொற்களையும், வாழ்வியலையும் பயன்படுத்தியே கட்டமைத்திருப்பார்.
உடலில் ஏற்படும் மாற்றங்களின் போதோ, இல்லை உறவுக்காரர்கள் புடைசூழ நடக்கும் சடங்குகளிலோ ஒரு பெண் பூப்பெய்துவதில்லை. அவளைப் பொறுத்தவரை தனது மனதுக்கு நெருக்கமான ஒருவனைக் காணும்பொழுதே அவள் பூத்துவிடுகிறாள். இங்கு மனது பூப்பதுதான் கணக்கு - வயது பூப்பது இல்லை.
ஆனால் இந்த விஷயத்தை அந்தப் பெண் பொதுவெளியில் பேசுவதற்கான புற சூழல் இச்சமூகத்தில் இல்லை. இந்த உணர்வை பூப்பெய்திய பெண் இடத்தில் இருந்து முத்து இப்படி சொல்கிறார்,
“அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்
அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்
நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்
அவன் கண்களிலே என் வயதறிந்தேன்”. சடங்குகளை மீறிய வரிகள் இவை.
ஒரு ஆணைப் பார்த்த கணம் பூப்பெய்தினேன் என்று கூறும் ஒரு பெண்ணின் உணர்வையும், மனதுக்குள் தோன்றிய புது காதலையும் ஒரு ஆணாக இருந்துகொண்டு இப்படி எழுத முடியுமா?. கூடு விட்டு கூடு பாயும் முத்துக்குமாரால் முடியும்.
மனித மனம் குரூரம் நிறைந்தது. அதில் கொலை, பலி, பழி, களவு, கொலை உணர்வு என அனைத்தும் இருக்கும். இவ்வளவு வன்மங்கள் இருக்கும் மனித மனதில் கொஞ்சம் கருணையும் இருக்கத்தான் செய்கிறது. அதை இந்த உலகமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அதை “அவனப் பத்தி நான் பாடப்போறேன்” என்ற பாடலில் ’களவிருக்கும் உளவிருக்கும் கொலையிருக்கும் கொஞ்சம் கருணையும் இருக்கும்” என அமர்த்தியிருக்கிறார் முத்துக்குமார். அவர் அடிப்படையில் கருணை படைத்தவர். பேரன்பு கொண்டவர். அந்த மனம் இருந்தால்தான் இவ்வளவு வன்மங்கள் இருக்கும் மனதில் கருணையும் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட முடியும்.
தலைவா திரைப்படத்தில் இடம்பெற்ற ”தமிழ்ப் பசங்க” பாடலின் ஃபாஸ்ட் பீட் ட்யூனுக்கு, ”அ, ஆ, இ, ஈ” என்பதை வைத்து பல்லவியை ஆரம்பித்து தமிழ் குறித்தும், தமிழ்நாட்டின் வாழ்வியல் குறித்தும் ஒருவரால் எழுத முடியுமா என்பது என்றும் மாறாத, யாராலும் மாற்ற முடியாத ஆச்சரியம்.
இன்னமும் அவர் தூறிக்கொண்டு இருக்கிறார் - மிஸ் யூ நா. முத்துக்குமார்
”அடையாளம்தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்” என்று முத்துக்குமார் சொல்வதில்தான் எவ்வளவு ஆழம் இருக்கிறது. துறத்தலில் இன்பம் எப்போதுமே நமது அடையாளத்தை துறப்பதுதான். நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட அடையாளத்தால்தான் எவ்வளவு பிரச்னைகள், ஈகோக்கள். அவற்றை உடைத்துவிட்டால் அனைவரும் சமத்துவத்தோடு வாழ்ந்துதானே ஆகவேண்டும். அப்படி வாழ்ந்தால் வன்முறைக்கு இடம் ஏது?
2.0 திரைப்படத்தில் அவர் எழுதிய ”புள்ளினங்காள்” பாடலில்கூட சிட்டுக்குருவிக்காக இரக்கம் காட்டியும், அந்த உயிர் மேல் பேரன்பு கொண்டும் வரிகளை வைத்துச் சென்றிருக்கிறார். அன்பு செய்தல் வேறு, அன்பு செய்து கொண்டே இருப்பது வேறு. முத்துக்குமார் இரண்டாவது ரகம். ஒரு மனிதனால் எப்படி இப்படி அன்பு செய்ய முடியும் என மற்றவர்களை மிரள வைத்தவர். அவரது கண்களில் எப்போதும் ஒரு மெல்லிய சோகம் இருக்கிறது என அனைவரும் கூறுவதுண்டு. அந்த சோகத்தை தன்னுள் புதைத்து மற்றவர்களுக்கு அன்பை போதித்த பேரன்புக்காரன்.
முத்துக்குமார் எழுதியவற்றில் காதல் பாடல்கள் ஏராளம். ஆனால் ஒரே காதலை வைத்துக்கொண்டு எப்படி அவரால் பல்வேறு கோணங்களில் எழுத முடிந்தது என்பதுதான் இங்கு முதல் ஆச்சர்யம். காதலியின் முகத்தைக் காண அனைத்து காதலர்களும் ஏங்கித் தவிப்பார்கள். ஆனால் ”கல்லறையில்கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி” என்று அவர் எப்படி எழுதினார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். சில ரகசியங்கள் தெரியாமல் இருப்பதே சுவாரசியம். அப்படி பார்க்கையில் முத்துக்குமார் எழுதிய பல வரிகளின் பின்னணி குறித்து நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே சுவாரசியம். அது அப்படியே இருக்கட்டும்.
இப்படி முத்துக்குமாரின் பாடல்கள் தொடர்பாக எழுதினால் குருவுக்குக் கட்டை விரலை கொடுத்த ஏகலைவன் போல், எழுதி எழுதியே கட்டை விரல் தேய்ந்துவிடும். மலை உச்சியில் நின்று கொண்டிருந்த அவர், எப்போதும் அந்த உச்சியை தன் தலை உச்சிக்கு ஏற்றிக்கொண்டதில்லை. அதனால்தான் நா. முத்துக்குமார் எனும் கவிதையின் கடைசி வரிகூட கருணையையும், அன்பையும் போதித்திருக்கிறது.
முத்துக்குமார் இதுவரை யார் மேலும் போர் தொடுத்ததில்லை. ஆனால் அவர் மீது பல போர்கள் தொடுக்கப்பட்டன. அந்த போர்களையெல்லாம் தனது எளிமையான கவிதைப் படை மூலம் தடுத்து அனைவருக்கும் அன்பை போதித்தார். அவர் குறுகிய காலம் வாழ்ந்த ஒரு பேரரசன். ஆனால் அந்த குறுகிய காலத்தில்தான் தமிழ்ப் பாடல்கள் எனும் பெரு நிலத்தில் அன்பு ஊற்றெடுத்து ஓடியது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் முத்துக்குமார் தமிழ் எனும் பெருநிலத்தை காத்து நின்ற பேரரசன். லவ் யூ நா. முத்துக்குமார்...
இதையும் படிங்க...'அவர் என் தந்தையானது எனது வரம்' - நா.முத்துக்குமாரின் மகன் கவிதை!