சென்னை: டைமிங், ரைமிங், வார்த்தை ஜாலம், உல்டா பேச்சு என தனது நகைச்சுவையில் எந்தவித இரட்டை அர்த்தமும் இல்லாமல் அனைத்து வயதினரையும் சிரிக்க வைத்த சிரிப்பு டாக்டர் கிரேஸி மோகனின் பிறந்தநாள் இன்று. (அக்டோபர் 16)
நாடகத்திலிருந்து திரைத் துறைக்கு வந்த கிரேஸியின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. படித்தது இன்ஜினியரிங், வேலை பார்த்தது கொஞ்ச இயரிங் என எங்கும் தொடர்ந்து வந்த அவரது பேச்சே ஹூமரை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ளாரோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும்.
கிரேஸி மோகன் என்றாலே, ஏணி மேல ஏறுனவருக்கு இரங்கல் செய்தியா? ஒரு தடியாள், ரெண்டு பொடியாள், பல சைஸில் அடியாள் வச்சிருக்கான், மேகி ஷார்ட் பார்ம், மைதிலி மீடியம் பார்ம்! அவரது படங்களில் வரும் பல வசனங்களைக் கூறலாம்.
சினிமாக்களில் அப்படியென்றால், நிஜ வாழ்க்கையில் எந்த மேடைகளிலும், பேட்டிகளிலும் பேசும்போது தவறாமல் அவர் குறிப்பிடுவது தனது வெற்றியின் ரகசியமாக கூட்டு குடும்ப வாழ்க்கை. தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா என பெரிய குடும்பமாக வாழ்வதை பெருமையாகக் கூறும் அவர், இதுவரை தன்னிடம் கிரேடிட், டெபிட் கார்டுகள் கூட கிடையாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்வார்.
தான் வாழ்ந்துவந்த மைலாப்பூரை, 'மை லவாப் பூர்' எனப் பிரித்து அதிலும் ஹூமர் சேர்த்து பேசும் கிரேஸி, உங்கள் அன்றாட வாழ்க்கையிலேயே நகைச்சுவை ஒளிந்திருக்கிறது. அதை வெளியே கொண்டுவந்து கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்தால் எல்லோரையும் சிரிக்க வைக்கலாம் என்பதே சிறந்த ஹூமருக்கு அவர் தரும் மந்திரம். அந்த வகையில் நகைச்சுவைதான் தன்னை அடையாளப்படுத்தும் அம்பலிக்கல் கார்டு (தொப்புள் கொடி உறவு) என பெருமையாகக் கூறுவார்.
இதற்கு உதாரணம் தரும் விதமாக, தன் வாழ்வின் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தையும் எங்கு பேசினாலும் குறிப்பிடத் தவறுவதில்லை. நாடகம், சினிமா தாண்டி நிஜ வாழ்க்கையிலும் தனது நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பேச்சால் சிரிக்கவைத்த வல்லவர்.
இவரது நகைச்சுவையில் இரட்டை அர்த்த வசனம் கிடையாது. மாறாக டைமிங், ரைமிங், வார்த்தை ஜாலம் என பல ரசனைகள் ஒளிந்திருக்கும். ஒன்றை புரிந்துகொண்டு சிரித்து முடிப்பதற்குள், அடுத்த காமெடியை ஷார்ட்...மீடியம்... ஃபுல் பார்மில் கடக்கவைத்திருப்பார் கிரேஸி.
முத்தாய்ப்பாக தனது எந்தப் பேச்சிலும் டேக் திங்க்ஸ் ஈஸி. லைஃப் பிகம்ஸ் கிரேஸி என்பதைத் தவறாமல் குறிப்பிடுவார். அவர் கூறுவது போல் வாழக்கற்றுக்கொண்டால், வாழ்கை அழகானதுதான்.