சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புகள் இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளன. இதற்கிடையே ஃபெப்சி தலைவர், செய்தியாளர்களைச் சந்தித்து படப்பிடிப்பில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவித்தார்.
சென்னை வடபழனியிலுள்ள ஃபெப்சி அலுவலகத்தில் கரோனா பேரிடர் காலத்தில் 25 ஆயிரம் திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் திரைப்பட தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை கூட்டும் கபசுரக் குடிநீர் சூரணம், சித்த மருத்துவப் பொருள்கள் மற்றும் ஹோமியோபதி மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இணைந்து தொழிலாளர்களுக்கு மேற்கூறிய பொருள்களை வழங்கினர்.
இந்த நிகழ்வில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி மற்றும் திரைத்துறை சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறியதாவது:
"சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் அங்கு கடைபிடிக்க பட வேண்டிய வழிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். படப்பிடிப்பு தளங்களில் கடைபிடிக்க வேண்டிய 60 நிபந்தனைகள் வழங்கி இருக்கிறார்கள் அதில் 50 விழுக்காடு பின்பற்றினால் கூட போதும், கரோனா பரவலை தடுத்துவிடலாம்.
பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில், திரைப்பட துறையில் நல்ல நிலையில் இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது ஒரு நாள் உழைப்பை தந்து உதவ வேண்டும்.
படப்பிடிப்பு தளங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டால் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள" என்று கூறினார் .
இதையும் படிங்க: வாணி ராணி தொடர் நடிகைக்கு கரோனா!