ஆஸ்கர் விழாவில் கிண்டல்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று (மார்ச் 28) கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை ஸ்டான்ட்-அப் காமெடியனும் தொகுப்பாளருமான கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது, கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித்தின் ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி குறித்து கிண்டலுடன் பேசினார்.
இதனால் பொறுமை இழந்த வில் ஸ்மித் மேடையை நோக்கி நடந்து சென்று, கிறிஸ் ராக்கின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார். கன்னம் சிவக்க விழுந்த அறையை வாங்கிய கிறிஸ் ராக், ஒருவழியாக சமாளித்தார். இதையடுத்து ஸ்மித் என்னுடைய மனைவி குறித்து வாய் திறக்காதே என எச்சரித்தார்.
காதலுக்காக எதையும் செய்யலாம்: இதே விருதுவிழா மேடையில்தான் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார் ஸ்மித். விருது வாங்கிய பின்னர், தான் நடந்து கொண்ட விதத்திற்காக, கண்ணீர் மல்க மன்னிப்பு கோரிய வில் ஸ்மித், கிறிஸ் ராக்கின் பெயரை உச்சரிக்க கூட மறுத்துவிட்டார்.
காதல் உங்களை வேடிக்கையான விஷயங்களை செய்யத் தூண்டும் என அவர் பேசியது அனைவரையும் உருக வைத்தது. வில் ஸ்மித் செய்தது சரியா, மேடை நாகரிகமா என ஆராய்ச்சி செய்வதற்கு முன்னால், என்ன நடந்தது? என்பதை அறியவேண்டும்.
வன்முறை எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்ள முடியாததோ, உருவ கேலியும் அப்படியே. வில் ஸ்மித்தின் மனைவி எதிர்கொண்டுள்ள உடல் நல சவால் என்னவென்று பார்க்கலாம்.
ஜடா ஸ்மித்துக்கு என்ன பிரச்சனை?: அலோபீசியா என்ற நோயின் தாக்கத்தால் தலைமுடியை இழந்து வருகிறார் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித். இந்த நோய் தாக்கிய நபருக்கு முடி இழப்பு ஏற்படும். வேறு எந்த பிரச்சனையும் ஏற்படாது.
இது குறித்து ஜடா ஸ்மித் 2018ஆம் ஆண்டு வெளிப்படையாக அறிவித்தார். தனது தலை முடியை முழுவதுமாக வெட்டிக் கொண்டு வெளியுலகில் தோன்றினார். அப்படி 2021ஆம் ஆண்டு முதல் முடி இல்லாத ஸ்டைலுடன் திரைப்படங்களிலும், பொதுவெளியிலும் தோன்றினார்.
தொடரும் உருவ கேலி: உருவ கேலி என்பது பிரச்சனைகளிலிருந்து மீண்டு வரும் நபரை வெளியே வர விடாமல் தள்ள முயற்சிக்கும் அப்பட்டமான அத்துமீறல். வில் ஸ்மித் அறைந்தது எவ்வளவு தவறோ, அதனைக் காட்டிலும் கிறிஸ் ராக் வார்த்தைகளால் காயப்படுத்தியது தவறு.
வில் ஸ்மித் ஆத்திரத்தை வெளிப்படுத்தியது தவறு என்றாலும் எத்தனையோ இடங்களில் வெளிப்படுத்த முடியாததை மொத்தமாக கொட்டித் தீர்த்திருக்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
ஹாலிவுட் மட்டுமல்ல தமிழ் உள்ளிட்ட பிராந்திய தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் நகைச்சுவை என்ற பெயரில் உருவ கேலிகள் , அத்துமீறல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
ஆஸ்கர் பறிக்கப்படுமா? : கிசு கிசு என்ற பெயரில் நடிகர்களின் தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் விமர்சிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் வில் ஸ்மித் கிங் ரிச்சர்ட் (King Richard) திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.
தொகுப்பாளரை அறைந்த அதே மேடையில்தான் ஆஸ்கர் விருதை பெற்றார். வில் ஸ்மித் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான அலி திரைப்படம், 2007ஆம் ஆண்டு வெளியான பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ் திரைப்படம் இரண்டும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் ஸ்மித் வெற்றி பெறவில்லை. தற்போது முதல்முறையாக வென்றுள்ளார். இந்த ஆஸ்கர் விருது, தொகுப்பாளரின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததற்காக பறிக்கப்படுமா அல்லது உருவ கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்று அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அமைப்புதான் சொல்ல வேண்டும்.
ஆஸ்கரைப் பொருத்தவரையிலும் விதிகளை பின்பற்றுவதில் கண்டிப்புக்கு பெயர் போனவர்கள். இதனால் வில்ஸ்மித்தின் ஆஸ்கர் பறிக்கப்படலாம் என்கிறது, ஒரு தரப்பு ஆனால், வில் ஸ்மித் நடந்து கொண்டது எவ்வளவு தவறோ, அதனைக் காட்டிலும் கிறிஸ் ராக்கில் கிண்டல் தவறு என்கிறது மற்றொரு தரப்பு.
எனவே கடுமையான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு இல்லை என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. நடிகர் கிறிஸ் ராக்கும் தனிப்பட்ட முறையில், ஸ்மித்தின் குடும்பத்தினரை அணுகி வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆஸ்கர் விருதுகள் 2022: சிறந்த நடிகர், துணை நடிகர்