நடிகர் விவேக் தனது நகைச்சுவைக் காட்சிகள் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த மாமேதை. மாரடைப்புக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (ஏப்ரல் 17) அதிகாலையில் அகால மரணம் அடைந்தார். இத்துயரச் செய்தியால் திரையுலகினர் முதல் பொதுமக்கள் வரை மீளாத்துயருக்கு உள்ளாகினர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விவேக்கின் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. சிரிப்பின் மூலம் சிந்தனையை விதைத்த அந்த சிந்தனைக் கலைஞனுக்கு, பொதுமக்கள், ரசிகர்கள் திரளாக வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
இறுதியாக சென்னை மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில், காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்துல்கலாமை வேண்டுகோளை ஏற்று அவரையே வழிகாட்டியாக கொண்டு லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டவர் விவேக். அனைவரையும் மரக்கன்றுகளை நடச்சொல்லி வலியுறுத்தி வந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் மரக்கன்றுகளை கையில் ஏந்தியபடி பொதுமக்கள் கலந்து கொண்டது காண்போர் அனைவரையும் நெகிழ வைத்தது.