'ராட்சசன்' படத்தின் வெற்றிக்கு பின் விஷ்ணு விஷால் திரைத்துறையில் இருந்து சற்று விலகியிருந்தார். காரணம் விவாகரத்து, குழந்தையின் பிரிவு, உடல் பிரச்சனைகள், நிதியிழப்பு என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்தார்.
பின் அதிலிருந்து விடுபட்டது குறித்து நீண்ட கடிதம் ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், 'வாரணம் ஆயிரம்' வழியில் எனத் தெரிவித்தார்.
ஏனென்றால், கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா தனக்கு ஏற்பட்ட காதல் தோல்வி, போதைக்கு அடிமை உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து உடற்பயிற்சி செய்து மீள்வார். அதே போன்று நானும் உடற்பயிற்சி செய்து எனது பிரச்னைகளில் இருந்து மீண்டுள்ளேன் என்று கூறியிருந்தார்.
விஷ்ணு விஷாலின் இந்த கடிதத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஷ்ணு விஷாலின் கடிதத்தை படித்த கெளதம் மேனன், “உண்மையில் இது உத்வேகம் அளிக்கிறது விஷ்ணு. எங்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி. அந்த 'வாரணம் ஆயிரம் வழி' வேலை செய்கிறது. என்று ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு கருத்து தெரிவிக்கும் விதமாக விஷ்ணு விஷால், எனக்கு உத்வேகம் அளித்ததற்காக நன்றி சார். ஆம் அந்த 'வாரணம் ஆயிரம்' வழி வேலை செய்கிறது. தரமான சினிமாவுக்கான இன்னொரு சக்தி வாய்ந்த உதாரணம். யதார்த்தத்தைச் சந்தித்துப் பல ஆண்டுகளுக்கு பொருந்தும் படம் அது என்று தெரிவித்துள்ளார்.