சென்னை: தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் திரைப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்துள்ள ஆத்மா பேட்ரிக் நமது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.
பெங்களூருவில் மைக்ரோசாப்ட் கம்பெனியில் வேலை பார்த்தேன். சாப்ட்வேர் கத்துக்கிட்டதால எடிட்டிங், டிசைனிங் அப்படியே பழகிடுச்சி. சாப்ட்வேர் பீல்டு போர் அடிக்கவே, வேலையை ரிசைன் பண்ணிட்டு சென்னையில் எடிட்டிங் ஸ்டூடியோ ஆரம்பிச்சேன்.
நானே இரண்டு படங்களுக்கு எடிட்டராக வேலை பார்த்துள்ளேன். இப்படித்தான் எனக்கு திரை உலகம் அறிமுகம் ஆனது என்றார் ஆத்மா.
என்னதான் நதியை அடைத்து வைத்தாலும் அது போகிற போக்கில்தான் போகும். அதுபோலதான் ஒருவர் கீழ்படிந்து வேலை பார்க்க விருப்பம் இல்லை. என்னுடைய கிரியேட்டிவ் திறமையை வெளியில் காட்ட மீடியாவுக்குள் வருவதுதான் நல்லதுனு தோணுச்சினு என தனது பணி துறப்புக்கு விளக்கம் கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நடிகர் ஆக வேண்டும் என்று சினிமாவுக்கு வரவில்லை. திடீரென வந்தது தான் தனது சினிமா வாய்ப்பு.
ஜெனிஃபர் என்பவர் மூலமாகத் தான் ஒரு சப்போர்டிங் கேரக்டருக்கு ஆள் தேவை என்று அறிந்து கொண்டேன். நல்ல உயரமான ஆள் தேவை என்பதால் எனக்கு பொருத்தமாக இருந்தது. ஆர்யா நடித்த 'மீகாமன்' படத்தில் முதன் முதலாக அறிமுகம் ஆனேன்.
எடிட்டர் - நடிகர் அனுபவம் பற்றி கேட்டபோது,
திரைக்கு பின்னால் எடிட்டராக வேலைப்பார்க்கையில், சரியாக காட்சிகள் எடுக்கவில்லை, நடிகர்கள் நடிக்கவில்லை என்று சத்தம் போடுவோம். ஆனால் நடிகனாக வந்த பிறகுதான் அது புரிந்தது.
தற்போதைய ஸ்டார்களும் ஆரம்பத்தில் தடுமாறிதான் இருந்திருப்பார்கள் என்று புரிந்தது. எனக்கு பெரியதாக ஸ்டார் ஆக வேண்டும் என்பதை விட, வரும் வருமானத்தில் வீட்டை நன்றாக கவனித்து கொண்டாலே போதும் என்று தோணியது.
நடிகர் ஆனதில் சில சமூக சேவை ஆற்றுவதற்கும் எனக்கு உதவியாக உள்ளது. எனக்கு இயற்கை பிடிக்கும். நான் சாதாரணாமானவனாக இருந்து பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தாதீர்கள் என்றால் யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால் நடிகராக இதை சொல்லும்போது அது நடக்கிறது. இது சந்தோஷமாக உள்ளது.
தல - தளபதி ஆகியோருடன் நடித்த அனுபவம் குறித்து...
என்னுடைய மூன்றாவது படமே 'என்னை அறிந்தால்'. அஜித் சார் மிகவும் எளிமையானவர். பெரிய ஹீரோனாவே கெத்து என்ற பிம்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர். ஜாலியா இருப்பார். தளபதி நடிப்பு, வேலை திறமை, அதற்காக அவர் தயாராவது ஆகியவை பிடிக்கும் என்கிறார்.
பிகில் அனுபவம் பற்றி...
பிகில் படத்துக்காக விஜய்யுடன் 70 நாட்கள் இருந்தேன். அது நன்றாக அவருடன் பழகும் வாய்ப்பை அளித்தது. சாதாரணமாக நான் பட ஆடிஷனுக்கு செல்லமாட்டேன். திடீரென ஒரு நாள் போன் கால் வந்தது. படத்தில் நடிக்க இயக்குநர் அட்லி வர சொன்னார்.
டைரக்டர் என்னை நினைவில் வைத்து அழைத்ததால் எனக்கு சந்தோசம். படத்தில் ஜாலியாக நடித்தேன். இயக்குநர் அட்லி நடிகர்களுடன் ஈஸியாக ஒட்டிக்கொள்வார். அதிகமாக வேலை வாங்க மாட்டார். அசிஸ்டென்ட் டைரக்டர்கள் நடிகர்களிடம் எப்படி நடந்து கொள்கின்றனர் என்று கவனிப்பார். அவர் சூப்பர் டைப் என்றார்.
பிகில் படத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றி...
பிகில் திரைப்படத்தில் விஜய் நண்பனாக ஒரு பாசிட்டிவ் கேரக்டர். எது நடித்தாலும் மக்களது மனதில் பதிய வேண்டும். 'பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ அதெல்லாம் பார்க்க மாட்டேன். நல்ல கேரக்டர், நல்ல கதை இருந்தாலே போதும் நடிப்பேன். வில்லனாக இருந்தால் ஆஆ .. ஊ ஊ.. அட்ரா, வெட்றா... என்ற டயலாக்தான் இருக்கும்.
தெலுங்கு சினிமாவில் நடித்த அனுபவம்...
செல்லபதி என்ற மானேஜர் தான் தெலுங்குக்கு அழைத்துச்சென்றார். மோகன்லால் - ஜூனியர் என்டிஆர் நடித்த 'ஜனதா கேரேஜ்' படத்தில் நடித்தது நல்ல அனுபவம். மோகன்லால் ஒரு லெஜெண்ட். இங்கு, அஜித் - விஜய் போல என்டிஆரும் பெரிய ஸ்டார். அவரது டான்ஸ், பைட், டயலாக் டெலிவரி எல்லாம் பக்கா. இந்த படத்தின் மூலம் எனக்கு நல்ல வரவேற்பு. அங்கு ரசிகர் மன்றமே உருவாக்கி உள்ளனர். எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
தல - தளபதி என ரசிகர்களின் மோதல்கள் பற்றி உங்கள் கருத்து...
ஹாலிவுட், பாலிவுட்டில் இதுபோன்ற சண்டை இருந்ததில்லை. அவர்களுக்குள் போட்டி மட்டுமே உள்ளது. இங்கு மக்கள் அப்படிதான் வளர்க்கப்படுகிறார்கள்.
சினிமாவில் இருந்துதான் முதலமைச்சர்கள் வந்துள்ளனர். படத்தில் வரும் ஹீரோவை நிஜவாழ்வு ஹீரோவாக நம்பி விடுகிறார்கள். அதனால் தான் இந்த சண்டை. ஆனால் தல - தளபதி நல்ல பிரெண்ட்ஸ். இதை சரிசெய்ய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் அல்லது ஒரு பேட்டி கொடுக்கலாம்.
பிகில் படம் எப்படி வந்துள்ளது...
பிகில் படத்தில் கால்பந்தாட்ட சீன், சிங்கப்பெண்ணே பாடல் சீன், டெல்லி பார்லிமென்ட்டில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி ஆகியவற்றை கேமராமேன் விஷ்ணு எடுத்திருந்த விதம் என்னை பிரம்மிப்புக்குள்ளாகி உள்ளது. படத்தின் விஜய் என்ற கிராண்டு மட்டுமில்லாமல், நல்ல விசுவலும் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும்.
இந்தப் படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தை பென்ட்ரைவ், மொபைலில் பார்ப்பதை தவிருங்கள். ஏற்கனவே ஜிஎஸ்டி ஆகியவற்றால் சினிமா துறை மோசமாக உள்ளது. தியேட்டருக்கு போய் படத்தை பாருங்கள். கண்டிப்பாக பிகில் நல்ல படமாக இருக்கும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று தனது பேட்டியை முடித்து கொண்டார் ஆத்மா.