சென்னை: நடிகர் விமல் நடிப்பில், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'விலங்கு' வெப் சீரிஸ், திருச்சியில் நடந்த இரண்டு உண்மைச் சம்பவங்களை திரைக்கதையாக்கி, தமிழ் ரசிகர்களுக்கு புலனாய்வு த்ரில்லராக படைக்கப்பட்டிருக்கிறது.
மொத்தம் ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரை, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இதில் விமலுடன், இனியா, பால சரவணன், முனீஷ் காந்த், ரவி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வேம்பூர் காவல்நிலையம், அதன் காவலர்கள், கைதிகள், அங்கு வழக்கமாக நடைபெறும் பணிகள் என நிதானமாகத் தொடங்கும் முதல் எபிசோட் திரில்லர் வெப் சீரிஸுக்கே உரித்தான ஒரு பரபரப்பான மர்மங்களுடன் முடிகிறது.
க்ரைம் - திரில்லர் தொடராக இருந்தாலும், அதனுள் வட்டார மக்களின் கலாசாரங்கள், பேச்சுவழக்குகளை முழுக்கப் பயன்படுத்தியிருப்பது ரசிக்க வைத்துள்ளது. குறிப்பாக சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராக காட்டப்பட்டுள்ள காட்சிகள், தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் சாதிய அடிப்படையிலான தகவல்களை ரியாலிட்டிக்கு ஏற்றார்போல் கொடுத்து அப்ளாஸ் அள்ளுகிறார் இயக்குநர்.
ஜீ5 ஓடிடியில் ரிலீஸாகிய இப்படம் தனிச் சாதனைப் படைத்துள்ளது. அதாவது ஓடிடி வரலாற்றில் மாபெரும் ஹிட் அடித்த இந்த வெப் சீரிஸ் என்ற நற்பெயரைப் பெற்றுள்ளது.