தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தற்போது நெல்சன் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இதனை தொடர்ந்து முதன்முதலாக தெலுங்கு படம் ஒன்றில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அப்படி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஜய்க்கு 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் ரசிகர் மன்றம் இருக்கிறது.
ரசிகர் மன்றமாக செயல்பட்டு வந்த இதை நடிகர் விஜய் கடந்த 2009-ம் வருடம் 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பாக அறிவித்தார். விஜய் மக்கள் இயக்கத்திற்கென தனி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த வருடம் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். இதன் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக நடிகர் விஜய்யின் தாய் ஷோபா ஆகியோர் இருப்பதாக எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவித்தார்.
இது குறித்த அறிவிப்பு வந்த போதே அதற்கு எதிர்வினையாற்றிய நடிகர் விஜய், தனக்கும் தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனது பெயரையும் புகைப்படத்தையும் அரசியல் அமைப்புக்கு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அறிவித்து விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நிர்வாகிகள் சிலரை நீக்கியதும் அந்த சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக தனது தாய், தந்தையர் மீது விஜய் கடும் கோபத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இவர் தனது தாய் சோபா சந்திரசேகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ’கண்ண தொறக்கணும் சாமி...’; 80'ஸ் எட்டாக்கனி ஊர்வசி பிறந்தநாள்!