இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், 'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஓ மை கடவுளே (Oh My கடவுளே)'. ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சின்னத்திரையில் பிரபலமான வாணி போஜனும் நடித்திருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. அந்த டீசரில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருப்பது தெரியவந்தது.
அவர் இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார். இது குறித்து பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இப்படத்தின் திரைக்கதை முடிக்கப்பட்டு முக்கிய நடிகர்களின் தேர்வுகள் முடிந்த பிறகு விஜய் சேதுபதி நடித்துள்ள இந்தப் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஏற்ற ஒருவரை தேடினோம். அந்த நடிகர் மிகப்பிரபலமாவும் அதே நேரம், கேரக்டரில் எளிமையை நிஜத்தை பிரதிபலிக்க வேண்டும் என எண்ணினோம்.
இறுதியாக அசோக் செல்வன் மூலம் விஜய் சேதுபதியிடம் இந்த கதாபாத்திரம் பற்றி விவரித்தேன். அவர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தக் கேரக்டர் படத்தில் வருவது சிறிது நேரமாக இருக்கலாம் ஆனால் ரசிகர்கள் மனதில் மிக நெருக்கமாக உணரக்கூடியதாக இருக்கும். விஜய் சேதுபதியின் தோற்றம் சிறப்புத் தோற்றம் என்பதை விட என்னைப் பொறுத்தவரை இது படத்தை மாற்றும் முக்கிய கதாப்பாத்திரம் என்பேன்.
சினிமாவில் பெரு வெற்றிகள் மூலம் தமிழக மக்களின் அன்பை அள்ளியிருக்கும் விஜய் சேதுபதி எங்கள் படத்தில் இணைந்ததில் மொத்த படக்குழுவுக்கும் மகிழச்சி. அவருக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
“ஓ மை கடவுளே” இன்றைய நகர்புற மேல்தர காதலை இயல்பாக சொல்லும் காதல், காமெடிப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. படத்தின் இசை மற்றும் பட வெளியீட்டு தேதிகள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.