தமிழில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி பல வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். தன் சினிமா அத்தியாயத்தின் அடுத்தக்கட்ட பாய்ச்சலாக தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் புதிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் 'உப்பனா' மற்றும் 'சை ரா நரசிம்மா ரெட்டி' என்ற இரு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மலையாளத்தில் ஜெயராமுடன் விஜய் சேதுபதி சேர்ந்து நடித்த 'மார்கோனி மத்தாய்' படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் ஜெயராம் ‘மத்தாய்’ என்ற பெயரில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார்.
படத்தின் கதைக்களம் ரேடியோவை மையமாக வைத்து நகர்வதால் ரேடியோவை கண்டுபிடித்த 'மார்கோனி' பெயரை இணைத்து படத்தின் பெயரை வைத்துள்ளனர். விஜய் சேதுபதி ரேடியோ ஜாக்கியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படம் ஜூலை 11ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.