"ஒரு மொழியை எவர் வேண்டுமானாலும் எளிதில் கற்று, வேற்று மொழிப்படத்தில் நடித்துவிடலாம். ஆனால் அந்தந்த மொழிக்கென்று தனித்துவ மரபுண்டு. அதைக் கற்று நடிப்பதன் மூலம்தான் சினிமா எனும் கலையின் மூலம் பார்வையாளர்களோடு ஒன்றிணைய முடியும்”, சமீபத்தில் நடந்த சினிமா குறித்த உரையாடல் ஒன்றில் விஜய் சேதுபதி கூறிய வார்த்தைகள் இவை. நடிகனைத் தாண்டி ஒரு அர்ப்பணிப்புமிக்க கலைஞனாக தன் கொஞ்சும் ஆங்கிலத்தில் விஜய் சேதுபதி கலந்துரையாடலில் இவற்றை உரைத்த தருணத்தில் ஆயுஷ்மான் குரானா, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பாலிவுட்டின் தலைசிறந்த நடிகர்கள் எந்த அளவு அவரை உற்று நோக்கி ரசித்தார்களோ, அதே அளவு அத்தனை தமிழ் சினிமா ரசிகர்களும் அவரை பூரிப்புடன், பெருமிதம் பொங்க ரசித்தனர். தன் படங்கள் எவ்வாறு ஒரு சாமான்யனை சென்றடைய வேண்டும் என்பது குறித்த இந்தத் தெளிவினைக் கொண்டிருப்பதால்தான், மக்கள் செல்வனாக தமிழ் மக்களின் மனதில் பெரும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி.
கதாநாயகனுக்கு உரித்தான எவ்வித ஆர்ப்பாட்டங்களுமின்றி, எளிமையான தோற்றத்தோடு வலம்வரும் விஜய் சேதுபதியை, முதன்முதலாக தமிழ் சினிமா உற்றுநோக்கத் தொடங்கியது தென்மேற்குப் பருவக்காற்று என்ற திரைப்படத்தில் தான். ஆனால் இதற்குமுன் புதுப்பேட்டை, நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடிக்குழு, சுந்தரபாண்டியன் என தனக்குக் கிடைத்த எந்தவொரு சிறு வாய்ப்பையும் நழுவவிடாமல், நடிப்பின் மீது கொண்ட காதலை மட்டுமே உறுதியாகக் கொண்டு தமிழ் சினிமாவையே தன்னை அடையாளம் காண வைத்தவர் விஜய் சேதுபதி.
ராஜபாளையத்தில் எந்தவித சினிமா பின்னணியுமற்ற, சாதாரண குடும்பத்தில் பிறந்த விஜய் சேதுபதி முதலில் கணக்காளராகத் தான் தன் பணியைத் தொடங்கியுள்ளார். பொதுவாக சினிமாவைப் பின்னணியாகக் கொண்டோ அல்லது சிறு வயது முதல் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தினாலோ இத்துறைக்குள் ஒருவர் அடியெடுத்துவைப்பார். ஆனால் விஜய் சேதுபதிக்கு நடிப்பின் மீது காதல் பிறந்தது, கூத்துப்பட்டறை ஒன்றில் அவர் கணக்காளராகப் பணிபுரிந்தபோது நடிகர்களை உற்றுநோக்கத் தொடங்கிய இடத்தில்தான்.
ஒரு நடிகனின் கண்கள்தான் பார்வையாளனிடம் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தும். விஜய் சேதுபதி சினிமா வாய்ப்புத்தேடி ஒருமுறை பாலுமகேந்திராவை அணுகிய சமயம் அவரால் சினிமா வாய்ப்பினைப் பெற முடியவில்லை. ஆனால் விஜய் சேதுபதியின் கண்களைப் புகைப்படமெடுத்துக் கொண்டு அவரை அலுவலகத்திலிருந்து திருப்பி அனுப்பியுள்ளார் பாலுமகேந்திரா. இப்படி சினிமா துறையில் நுழையும் முன்பே இந்தியாவின் பெரும் இயக்குநரையும் ஈர்த்த கண்கள் விஜய் சேதுபதியின் கண்கள். அன்று தன் கண்களால் பாலுமகேந்திராவைக் கட்டிப்போட்டவர் இன்று தமிழ் சினிமாவின் தனித்துவ நடிகனாகி மக்கள் மனதை ஆக்கிரமித்துள்ளார்.
ஒரு முரட்டு தாதாவாக 'சூது கவ்வும்', காதலிக்காக ரவுடியாக முயற்சிக்கும் இளைஞனாக 'நானும் ரவுடிதான்', தனிமையாலும் காதலாலும் அலைக்கழிக்கப்படும் உள்ளூர் ரவுடியாக 'காதலும் கடந்து போகும்' என விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் காட்டிய பரிணாமங்கள் ஒவ்வொன்றும் கதாநாயகனுக்கான இலக்கணங்கள் தாண்டிய புதுவித பெஞ்ச்மார்க் கதாப்பாத்திரங்கள். பொதுவாக இயக்குநர் மணிரத்னத்தின் திரைப்படங்களில் நடிக்கும் எந்தவொரு நடிகரும் டைரெக்டர்ஸ் ஆக்டராக மாறிய தமிழ் சினிமாவில், தனக்கே உரித்தான ஸ்டைலை எந்தவொரு இடத்திலும் இழக்காமல் ரசூலாக நம்மை ரசிக்கவைத்திருப்பார் விஜய் சேதுபதி.
சூப்பர் டீலக்ஸில் அவர் நடித்த திருநங்கை ஷில்பா கதாப்பாத்திரம் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், ஒரு கதாப்பாத்திரத்திற்காக ஒரு நடிகன் எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்கு இனிவரும் நடிகர்களுக்கு விஜய் சேதுபதி ஒரு ரோல்மாடலாக திகழ்வார்.
கார்த்திக் சுப்பராஜ், நலன் குமாராமி உள்ளிட்ட இயக்குநர்களின் குறும்படங்களின்மூலம் நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, இவர்களுடன் இணைந்தே வளர்ந்து தமிழ் சினிமாவில் இன்றைக்கு இவர்கள் அனைவருமே கவனிக்கத்தக்க, தவிர்க்க இயலாத இடங்களை அடைந்திருப்பதும், தங்களின் வளர்ச்சியை ரசித்துக் கொண்டாடுவதும், சினிமா துறைக்குள் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் நம்பிக்கை ஒளியாக இவர்கள் திகழ்வதும் தமிழ் சினிமாவின் ஆரோக்கிய சூழலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
“அவர் ஒரு சாதாரண நடிகன் அல்ல, ஒரு மஹா நடிகன்” என சூப்பர்ஸ்டார் தொடங்கி, கமல்ஹாசனுக்குப் பிறகு தான் இணைந்து நடித்த ஒரு பெரும் நடிகன் விஜய் சேதுபதி என மாதவன் வரை உடன் நடித்த எந்தவொரு நடிகரையும் எளிதில் ஈர்த்து எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி தன் வளர்ச்சியை ரசிக்கவைப்பவர் விஜய் சேதுபதி. தன் வாழ்வில் சந்தித்த மாபெரும் நடிகர்களுள் ஒருவர் விஜய் சேதுபதி என்ற ஷாருக்கானின் புகழ்ச்சியைத் தொடர்ந்து பாலிவுட், சேதுபதியின் வரவிற்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறது.
தற்போது தமிழ் சினிமா தாண்டி சிரஞ்சீவி, ஆமீர்கான் எனப் பெரும் நடிகர்களுடன் அடுத்த தளத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ள விஜய் சேதுபதியின் சினிமா பயணம் உலக அரங்கில் சிறக்க வாழ்த்துவோமாக...!