இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்திருந்தார்.
இதில் விஜய் ஆண்டனியுடன் சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தையடுத்து விஜய் ஆண்டனி தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வர தொடங்கினார்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கான கதை திரைக்கதையை விஜய் ஆண்டனியே இந்த ஊரடங்கு காலத்தில் எழுதி முடித்துள்ளார்.
இப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் பிறந்த நாளான இன்று (ஜூலை 24) படக்குழு 'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
விஜய் ஆண்டனி தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளது. விஜய் ஆண்டனியே படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.
விரைவில் விஜய் ஆண்டனி நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர், நாயகன், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையுடன் தமிழ்சினிமாவில் வலம் வந்துகொண்டிருந்த விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன் 2' படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதின் மூலம் கதாசிரியராகவும் வலம் வர உள்ளார்.