தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக உருவெடுத்துள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
லால், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், கடந்த மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அது மட்டுமின்றி, மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தைப் போல, கர்ணனும் சமூக வலைதளத்தில் அரசியல் உரையாடலை ஏற்படுத்தியது.
அதே சமயம் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. 'பண்டாரத்தி புராணம்' என்ற பெயரில் பாடல் வெளியானபோது, இந்தப் பாடல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாகக் கூறி, இதனைப் படத்திலிருந்தும், இணையத்திலிருந்தும் நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அந்தப் பாடல், 'மஞ்சனத்திப் புராணம்' என மாற்றப்பட்டது.
இந்தப் பாடலில் மரண வீட்டில் மனைவியின் இறப்பைத் தாங்க முடியாமல் முதியவர் பாட, சாண்டி மாஸ்டரின் கோரியோ கிராப்பில் தனுஷ் குத்தாட்டம் ஆடியுள்ளார். 'காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்' என இப்பாட்டின் இறுதியில் இடம்பெறுவது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அனைவரின் மனம் கவர்ந்த இப்பாடல் காட்சிகள் நாளை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக, திங்க் மியூசிக் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.