எளிய மக்களின் வாழ்வியலையும், மண்சார்ந்து வாழக்கூடிய மக்களின் மகிழ்ச்சியையும் எதார்த்தப் பார்வையுடன் தனது கலையின் மூலம் காட்சிப்படுத்தி வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது கலைப்பயணம் சிலருக்கு வியப்பைத் தந்தாலும் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களுக்கு ரோல்மாடலாக திகழ்கிறார்.
நடிகர் தனுஷை வைத்து இவர் இயக்கி வெற்றிபெற்ற வடசென்னை முதல் பாகத்தைத் தொடர்ந்து, வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி நான்காவது முறையாக ‘அசுரன்’ படத்தின் மூலம் இணைந்திருக்கிறது.
படத்தின் பூஜை தொடங்கப்பட்ட நாள்முதலே இதுதான் கதை என தீர்மானித்து ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொள்கின்றனர். கலைப்புலி எஸ்.தானு தயாரிக்கும் இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் கருணாஸ் மகன் கென் கருணாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அசுரன் 80களில் நடைபெற்ற கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாள்முதலே படத்தின் போஸ்டர் வலைதளபக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், 'அசுர வேட்டை விரைவில்' என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே, அசுரன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இப்படத்தின் போஸ்டர் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.