'வெண்ணிலா கபடி குழு 2' படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி, சென்னை வடபழனியில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விக்ராந்த், சூரி, பசுபதி, ரவி மரியா, அப்புக்குட்டி, தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொணடனர். ஒட்டகப்பாளையம் வ.உ.சி கபடி குழுவை படக்குழு தத்தெடுத்து, அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தனர். முதற்கட்டமாக விழாவில் ரூ.10 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், "தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன் முதலமைச்சராக வேண்டும் என நடிகர்கள் நினைக்கிறீர்கள் ஏன். அதேபோல் விளையாட்டுகளை ஊக்குவிக்கலாமே. விளையாட்டு சார்ந்த படங்களை ஊக்குவிக்க வேண்டும். ஒரு படம் எடுப்பதை விட அதனை கொண்டு சேர்ப்பது மிக கடினம்" என்றார்.
தொடர்ந்து நடிகர் சூரி பேசுகையில், "வெண்ணிலா கபடி குழு படத்தின் வெற்றி என் வாழ்வின் வெற்றி. என் வாழ்நாள் முழுவதும் இதன் மீதான ஈர்ப்பு இருக்கும். இதனால்தான் என் மகளுக்கு 'வெண்ணிலா' என பெயர் வைத்துள்ளேன். எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தாலும் வெண்ணிலா என்றுதான் பெயர் வைப்பேன். எத்தனை பேர் காலை பிடித்து இழுத்தாலும் கோட்டை தொட வேண்டும். இது கபடியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் தான்" என்றார்.