சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் பிப்ரவரி 18ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் 'வீரபாண்டியபுரம்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் சுசீந்திரன், நடிகர் ஜெய், நடிகை மீனாட்சி, பாலசரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது இசை அமைப்பாளரான நடிகர் ஜெய் கூறியதாவது, “2002ஆம் ஆண்டிலிருந்து இசை பயின்றுவருகிறேன். ஆனால், வெளியில் முயற்சிக்கவில்லை. எனது இசையைக் கேட்டு வைரமுத்து பாராட்டினார். கிராமத்துப் படம் என்பதால் இயற்கையாக இருக்க வேண்டும் என்று இசை அமைத்தோம்.
நான் எது சொன்னாலும் என் மீது நம்பிக்கை வைத்து வழிநடத்தியவர் என் தந்தை; அவருக்கு நன்றி. இயக்குநர் சுந்தர் சி-யின் பட்டாம்பூச்சி படத்திற்கு இசை அமைத்துள்ளேன். வரும் காலங்களில் எனது இசையில் நல்ல பாடல்களைக் கேட்பீர்கள்” என்றார்.
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது, “வேலை இல்லாமல் இருப்பது மிகவும் கொடுமையானது. என்னால் வேலை செய்யாமல் இருக்க முடியாது. பைத்தியம் பிடித்துவிடும். குற்றம் குற்றமே என்ற சிறிய படத்தை ஊரடங்கு காலத்தில் எடுத்துமுடித்தோம். வீரபாண்டியபுரம் படத்தை ஒரே சமயத்தில் தெலுங்கில் ஆதி, நிக்கி கல்ராணியை வைத்து எடுத்தோம். விஜய் ஆண்டனியுடன் வல்லிமை என்ற படத்தை இயக்குகிறேன்.
திரையரங்குகளை போலவே ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கும் இந்திய அளவில் மார்க்கெட் உள்ளது. எனது ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தை பார்த்து நடிகர் ரஜினி பாராட்டியதாக சூரி என்னிடம் கூறினார். எனக்கு கையில் அடிபட்டிருந்த சமயத்தில் ரஜினி போன் செய்து என்னை நலம் விசாரித்தார்.
என்றோ ஒருநாள் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தேன். தற்போது நான் ட்விட்டரில் இல்லை. அரசியல் மிகவும் கடினமானது நிம்மதியற்ற வாழ்க்கை. அஜித் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அப்படியே இருக்கட்டும். இனி ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ போன்ற தரமான படங்கள் எனது இயக்கத்தில் வரும்” என்றார்.
இதையும் படிங்க: தேவராட்டம் கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம்?