பண்டைய தமிழகர்களின் வாழ்க்கை முறை பள்ளிப்படிப்பின்போது தமிழ்ப் பாடங்களில் படித்தது நினைவிருக்கலாம். ஐந்திணைகள் அடிப்படையில் அப்பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளை எழுத்துகள் மூலமாக படித்து அறிந்திருக்கிறோம். அதையே வெள்ளித்திரையில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை ஏற்படுத்த முயற்சித்த படங்களில் முக்கியமானதாக அரவான் இருக்கிறது.
எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய சாகித்ய அகாதமி விருது வென்ற ’காவல் கோட்டம்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, கற்பனை கலந்து இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருந்தார் இயக்குநர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு என இரண்டு சிறந்த படைப்புகளையும், உரிய அங்கீகாரத்தையும் பெற்றதற்கு பின் தன் மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு அவர் 18ஆம் நூற்றாண்டில் தென் தமிழர்களின் வாழ்வியலை கதைக்களமாக எடுத்துக்கொண்டார்.
வரலாற்று கதையை செல்லுலாய்டில் பதிவதென்பது அவ்வளவு சாதாரண காரியமில்லை. அதுவும் நாவலாக புத்தக வடிவில் எழுத்துகளாக பதிவுசெய்யப்பட்டது வாசகர்கள் மனதில் கற்பனை காட்சிகளாக பல்வேறு பரிமாணங்களில் உலா வருவதை திரைவடிவமாக ஒரே நேர்கோட்டில் கொண்டுவந்து பார்வையாளர்களை ரசிக்க வைப்பது சவாலான விஷயம். இதன் காரணாமாகவே தமிழில் நாவலை படமாக்கும் முயற்சிகள் அரிதான நிகழ்வாகவே இருக்கிறது.
கதைக்களம், காலம், கதாபாத்திரங்கள் மீது நம்பகத்தன்மை கொஞ்சம் குறைந்தாலும் ஒட்டுமொத்த படமும் பார்வையாளர்களுக்கு சலிப்பை தந்துவிடும். அந்த வகையில் நாவலில் கூறப்பட்டதையும், தனது கற்பனையையும் வெகுஜன மக்களுக்கு புரியும் வண்ணம் அரவான் படத்தை உருவாக்கியிருப்பார் வசந்தபாலன்.
தமிழர் வாழ்வியல் படம் என்பதாலேயே தமிழரின் பெருமை என்று பேசாமல் களவை தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்த சமூகத்தை வைத்து படத்தின் கதையை கூறியிருப்பார். களவு செய்து அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வரும் கூட்டம், களவுக்காக அவர்கள் தீட்டும் திட்டங்கள், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நுணுக்கமாக களவு மேற்கொள்ளும் முறை என்று முதல் பாதி திருட்டு தொழிலைப் பற்றி விவரமாக குறிப்பிட்டிருந்தாலும், இப்படியும் ஒரு சமூகம் வாழ்ந்ததன் அடையாளம் பற்றி சுவாரஸ்ய பாணியில் காட்டப்பட்டிருக்கும்.
இந்த களவு கூட்டத்தினுள் சேரும் வேற்று ஊர் மனிதனான கதையின் நாயகன் ஆதியின் கதையை மையப்படுத்தி பின்பாதியில் பல முடிச்சுகளோடும், கிளைக்கதைகளோடும் பயணப்படிருக்கும்.
ஒவ்வொரு குற்றத்துக்கு பின்னணியிலும் ஏற்கனேவே திட்டமிடப்பட்ட மறைமுக குற்றங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதுபோல் இந்தப் படத்திலும், வரிப்புலியாக முதல் பாதியில் கலகலப்பூட்டும் ஆதி, பிற்பாதியில் சின்னான் கதாபாத்திரத்தில் பல முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு காரணான மையப்புள்ளியாகத் திகழ்வார்.
கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றும் அஞ்சலி, பரத் வெறும் காட்சிக்காக மட்டுமில்லாமல், கதையோட்டத்தின் முக்கிய புள்ளியாக திகழ்வதும், அவர்களால் ஏற்படும் வினைக்கு பலிகடாவாக யார் ஆகிறார்கள் என்பதை குட்டிக் குட்டிக் கதைகளாக யதார்த்தமாக விவரித்திருப்பார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் தனிச் சமூகம் என்று வாழ்ந்து வந்த அந்தக் காலத்தில், இரு ஊர்களுக்கிடையேயான பிரச்னை தீர்த்து வைக்கும் பாளையக்காரர் ஊர்மக்களுக்கு ராஜாவாகவும், கடவுளாகவும் பாவிக்கப்பட்டார். அதுபோன்றதொரு பாளையக்காரரின் சூழ்ச்சி, தனது பாளையத்து மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பாங்கு என அவர்களின் டீடெய்லிங்கும் காட்டப்பட்டிருக்கும்.
ஜல்லிக்கட்டு வெறும் போட்டி மட்டுமல்ல அது ஊர்மக்களின் கெளரவமாக பார்க்கப்பட்ட விதம், செய்யும் தொழில் களவாக இருந்தாலும் அதை குழுவாக திட்டமிட்டு செய்யும் நுணுக்கம், இழப்பால் திருந்தி வாழும் சமூகம், ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் நடுகல் வழிபாட்டில் இருக்கும் பின்னணி என பல்வேறு அம்சங்கள் தமிழர்கள் தங்களது வாழ்வியலில் கடைபிடித்த விஷயங்களை ஒட்டி அமைந்திருக்கும்.
அய்யனார், முனுசாமி என தங்கள் மூதாதையர்களை வழிபட்டுவந்த சமூகத்துக்கு, பெருமாள் என்ற கடவுள் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டார் என்பதை விளக்கும் காட்சிக்கு பின்னே இருக்கும் வரலாறும் காட்டப்பட்டிருக்கும்.
பழங்கால கதைக்களத்துக்கு ஏற்ப ஒளிப்பதிவு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு என தொழில்நுட்பமும், உடல்வாகு, பேச்சு வழக்கு என நடிகர்களும் தங்கள் பக்கம் கதைக்கான நியாயத்தை வலுப்படுத்தியிருப்பார்கள். படத்தில் பணியாற்றிய அனைவரும் தமிழரின் 18ஆம் நூற்றாண்டு வாழ்க்கை முறையை நம் கண் முன்னே அப்படியே நிறுத்த அபாரமாக உழைத்திருப்பார்கள்.
அரவான் படம் பற்றியும், கதை பற்றியும் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்கள் இருந்தபோதிலும், பார்வையாளர்களை கவர்வதில் அப்படம் கோட்டைவிட்டது. பெரும் எதிர்பார்ப்போடு இந்தப் படம் தொடங்கப்பட்டதுடன், படத்தின் தொடக்க விழாவில் ஒருவர் இருவர் என்ற தீம் பாடலும் வெளியிடப்பட்டது. இந்தப் படம் மூலம் பாடகர் கார்த்திக் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தார்.
சிறந்த படங்கள் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு படத்தை சரியாக பிரபலபடுத்துவது மட்டுமில்லாமல், அதை அனைத்து தரப்பினரும் பார்க்கும் விதமாக சரியான தருணத்தில் வெளியிடுவதென்பது மிகவும் முக்கியமான அம்சமாகத் திகழ்கிறது. அந்த வகையில் தமிழர்களின் வரலாற்றை பற்றிய பதிவாகவும், அனைத்து தரப்பினரும் பார்க்க தகுதியான கதையாக அமைந்திருந்த இந்தப் படம் ரிலீஸானது 2012 ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி.
தேர்வுகள் நிகழும் அந்த மாதத்தை தவிர கோடை விடுமுறையிலோ, வேறொரு பொது விடுமுறை நாளிலோ வெளியாகியிருந்தால் கவனத்தை பெற்றிருந்திருக்கலாம். நாவலை படமாக்கும்போது அது திரையில் கையாளப்பட்டிருப்பதன் விதம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுவது இயல்பு. அதில் அரவான் படமும் விதிவிலக்கு பெறாமல் சிக்கிக்கொண்டு படம் மீதும், கதை எடுக்கப்பட்ட பாணி மீதும் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. தமிழர்கள் பற்றி இப்படியொரு வரலாறு அவசியமா என்ற கேள்விகளும் எழுந்தன.
இதே நிலையைத்தான் அன்பே சிவம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களும் சந்தித்தன. இத்தனைக்கும் இவ்விரு படங்களும் பொங்கல் விடுமுறையில் வெளியானபோதிலும், படத்தில் நடித்த ஹீரோக்களுக்காக கவனம் பெற்றதே தவிர கதைக்காக இல்லை. பின்னாளில் இந்தப் படங்களின் கதை பற்றி அடுத்தடுத்து உலா வந்த பேச்சுக்கள் மூலம், தமிழ் சினிமாவுக்கு வந்த பொக்கிஷத்தை கண்டுகொள்ளாமல் விட்டோம் என்பதை உணர வைத்தது.
தற்போது அரவான் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகியும், வழக்கமான வரலாற்றுப் படங்களிலிருந்து மாறுபட்ட பாணியில் இப்படியொரு படம் தமிழர் வாழ்வியலை தொட்டு பேசியுள்ளது என்பதை நினைவுபடுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சுவாரஸ்யம் குறைவு, மொக்கை என ரிலீஸுக்குப் பின் பல்வேறு கமெண்டுகளை அரவான் சந்தித்தபோதிலும் இதுபோன்றதொரு கதை தமிழர் வரலாறு, வாழ்க்கை முறை குறித்து தேடி பார்க்கும் ஆர்வத்தை பலரிடையே ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. இந்தப் படம் பற்றி பெருமை பேசுவதற்கு இப்போது என்ன இருக்கிறது என்று நினைத்தாலும், காலத்தை முந்திக்கொண்டு வந்த படங்களின் வரிசையில் தனியொரு இடத்தை வைத்துள்ளது.
ஏனென்றால் இந்திய பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நிகழ்த்திய பாகுபலியோடு இதன் வசூலை ஒப்பிட வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் பாகுபலி கூறிய கலையம்சத்தைவிட அரவான் சளைத்தவனில்லை. அத்தோடு குற்றப்பரம்பரை பற்றி தமிழில் படம் எடுப்பதற்கு முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில், அதற்கு முன்னரே அதற்கு ஆணிவேராகவும் இந்தப் படம் அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் அன்பே சிவம், ஆயிரத்தில் ஒருவன் என ரசிகர்கள் புரிந்தகொள்ளாமல் பின்னர் புகழ்ந்து வரும் பொக்கிஷ பட்டியலில் அரவானும் ஒருவன்.