காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) சென்னை ரேடியோ சிட்டி எப்.எம்-இன் "லவ் குரு" நிகழ்ச்சியில் இரவு 9 மணிக்கு 96 திரைப்படத்தின் ஒலிச்சித்திரம் ஒலிபரப்பாக இருந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 96 திரைப்படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி, நாயகி த்ரிஷாவும் இந்த சிறப்பு நிகழ்ச்சி பற்றிய ரேடியோ சிட்டியின் விளம்பரத்தை ட்வீட் செய்து, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்கள்.
ஆனால் 96 திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியிருக்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம், திடீரென நீதிமன்றம் சென்று இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்ப தடை வாங்கியதாக தெரிகிறது.
இதுகுறித்து ரேடியோ சிட்டி நிறுவனத்திடம் கேட்டபோது, "96" திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்தாலும், அதன் ஆடியோ உரிமம் 'Think Music' நிறுவனத்திடமே இருக்கிறது. அவர்களிடம் அனுமதி பெற்றே 96 திரைப்படத்தின் ஒலிச்சித்திரம் நிகழ்ச்சியை தீர்மானித்தோம். ஆனால் 96 படத்தின் சேட்டிலைட் உரிமையை பெற்ற தனியார் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் பிப்ரவரி 14 அன்று இரவு 8 மணிக்கு வந்து நிகழ்ச்சியை ஒலிபரப்ப தடை பெற்றிருப்பதாக பல பக்க ஆவணங்களை கொடுத்தார்கள். எங்களுக்கு நீதிமன்றத்திலிருந்து எந்த வழிகாட்டலும் இல்லையென்றாலும், கோர்ட் உத்தரவை மதித்து நாங்கள் 96 திரைப்படத்தின் ஒலிச்சித்திர நிகழ்ச்சியை நிறுத்தினோம். இப்போது அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் புகாருக்கு நீதிமன்றத்தில் விளக்கமளிக்கத் தயாராகி வருகிறோம் என்றனர்.
96 திரைப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் அவர்களை தொடர்பு கொண்டபோது, அவர் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. Think music நிறுவனம் சார்பாக இதைப்பற்றி நீதிமன்றத்தில் விளக்கமளிக்க இருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக ரேடியோ வட்டாரத்தில் விசாரித்தபோது, 96 திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் விற்பதற்கு முன்பாகவே அதன் ஆடியோ உரிமத்தை Think Music நிறுவனம் கைப்பற்றியிருக்கிறார்கள். அதில் வசன பகுதிக்கான ஆடியோ உரிமையும் அடக்கம். ஆனால் தயாரிப்பாளர் நந்தகோபால், 96 திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை தனியார் நிறுவனத்துக்கு விற்றபோது, இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மட்டுமில்லாமல், OTT எனப்படும் ஆன்லைனில் திரைப்படத்தை சந்தைப்படுத்தும் உரிமை என பல உரிமைகளை ஒப்பந்தத்தை முழுமையாக படிக்காமலே எழுதி கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இப்போது ரேடியோ சிட்டியில் 96 திரைப்பட ஒலிச்சித்திரம் சர்ச்சை வலுக்கவே, இந்த விஷயங்கள் வெளியில் வருவதாகவும் பேசப்படுகிறது என்கின்றனர்.
கடைசியாக, இதைப்பற்றி ரேடியோ சிட்டி லவ் குருவிடமே கேட்டதற்கு, எங்கள் ரேடியோ சிட்டி நிறுவனம் சட்டத்தை மதிக்கும் நிறுவனம். அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் புகாருக்கு நாங்கள் நீதிமன்றத்தில் விளக்கமளிப்போம் என முடித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: போஸ் வெங்கட் முகத்தை பார்த்தால் நம்பிக்கை வரும் - விஜய் சேதுபதி பேச்சு