பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனிடையே எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் எஸ்.பி.சரண் இன்று (ஆக.17) தெரிவித்தார்.
எஸ்.பி.பி விரைவில் குணமடைந்து திரும்ப வரவேண்டும் என்று திரையுலகப் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து செய்திகள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து எஸ்.பி.பி குணமடைய வேண்டி வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், "எங்கள் வாழ்வின் அன்றாடமான எஸ்.பி.பி, விரைவில் மீண்டு வர வேண்டும். திரையுலகை நீங்கள் ஆள வேண்டும். என்னுடைய முதல் பாடலைப் பாடிய நீங்கள் என்னுடைய கடைசி பாடலையும் பாட வேண்டும். இந்த உலகமே உங்களுக்காக வேண்டுகிறது.
இந்த உலகத்திற்கு இன்பம் மட்டுமே கொடுத்த நீங்கள் ஒருபோதும் துன்பம் கொடுக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். பாட்டுக் குயிலே.. சிறகை விரி... கூண்டை உடைத்து மீண்டு வா! உங்களுக்காக இசை உலகம் காத்திருக்கிறது" என்று பேசியுள்ளார்.