ஓட்டப்பலக்கல் நீலகண்டன் வேலு குரூப் என்னும் கேரளாவைச் சேர்ந்த கவிஞரின் நினைவாக இலக்கியத்தில் சிறந்துவிளங்கும் நபர்களுக்கு ஓ.என்.வி விருதினை ஓ.என்.வி கலாசார மையம் ஆண்டுதோறும் வழங்குகிறது.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஓ.என்.வி விருது பிரபல தமிழ்க் கவிஞர் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, கலைஞரின் கோபாலபுர இல்லத்திற்குச் சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து உள்ளார்.
இதுகுறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கோபாலபுரத்தில் ஓ.என்.வி இலக்கிய விருதினைக் கலைஞருக்குக் காணிக்கை செய்தேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை வாழ்த்தி மகிழ்வித்தார்.
அவரது குரலும் அன்பும் இன்னும் அந்த இல்லத்தில் கலைஞர் வாழ்வதாகவே பிரமையூட்டின. தந்தைபோல், தமிழ் மதிக்கும் தனயனுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.