1996இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக 'இந்தியன் 2' உருவாகிவருகிறது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கிறது. ஏற்கனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படம் முடிந்தவுடன் கமல்ஹாசன் லைகா தயாரிப்பில் உருவாக உள்ள 'தலைவன் இருக்கிறான்' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை கமல்ஹாசனே இயக்கவும் இருக்கிறார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
’தலைவன் இருக்கிறான்’ படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லைகா நிறுவனம் தயாரிக்க இருந்த 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தில் இருந்து வடிவேலு விலகியதையடுத்து, அப்படத்தில் வடிவேலு வாங்கிய அட்வான்ஸ் தொகைக்குப் பதிலாக லைகா தயாரிக்கும் ’தலைவன் இருக்கிறான்’ படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே கமல்-வடிவேலு கூட்டணியில் வெளியான 'சிங்காரவேலன்', 'தேவர் மகன்', 'காதலா காதலா' நல்ல ஹிட்டைப் பெற்றதைத் தொடர்ந்து 'தலைவன் இருக்கிறான்' படமும் வெற்றியைப் பெறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'இந்தியன்' பட தயாரிப்பாளர் 'இந்தியன் 2'வில் விலகல்; காரணம் இதுதான்!