சென்னை: மறைந்த முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் திருப்பத்தின்போது வெளியான திரைப்படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. அந்த காலகட்டத்திலேயே எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அதிமுக எனும் புதிய கட்சியைத் தொடங்கி இருந்தார்.
அதன் பின்னரே இந்தத் திரைப்படம் அதிமுக கட்சிக் கொடியுடன் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர், முருகன், ராஜு என இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தார். திரைப்படத்தில் விஞ்ஞானியான முருகன், மின்னலைப் பிடித்து ஆக்கப்பூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார்.
எம்.ஜி.ஆரின் திறமைக்கு சான்றான திரைப்படம்
வில்லன் கூட்டமோ அந்தச் சூத்திரத்தை அபகரித்து பலனடைய முயற்சி செய்யும். இதனை விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அலுவலருமான ராஜூ, எப்படி எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார்? என்பது தான் கதை. இந்தத் திரைப்படத்தில் நாடு, நாடாக பயணிக்கும் கதாபாத்திரத்தை திறமையாக கையாண்டிருப்பார் எம்.ஜி.ஆர்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் பாடல்களை எழுதினர். படத்தில் வெளியான 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து வாழ வேண்டும்' உள்பட அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன.
"உலகம் சுற்றும் வாலிபன்" திரைப்படமானது, இன்றளவும் எம்.ஜி.ஆரின் நடிப்புத்திறமைக்கு ஓர் ஒப்பற்ற சான்று என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்
இந்நிலையில் இந்தத் திரைப்படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன், செப்டம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது, எம்.ஜி.ஆரின் ரசிகர்களை மகிழ்ச்சியைடையச் செய்துள்ளது.
இதனை ரிஷி மூவிஸ் சார்பில், சாய் நாகராஜன் வழங்க, உலகெங்கிலும் சரோஜா பிலிம்ஸ் வெளியிட, தமிழ்நாடு முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர்.
இதையும் படிங்க: கோடியில் ஒருவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!