'ராஜா ராணி' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். நடிப்பின் மூலம் தனது முதல் படத்திலேயே தனி கவனம் பெற்றார். இவர் நடிப்பு மட்டுமின்றி 'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'காக்கிசட்டை', 'தெறி', 'கபாலி', 'காலா', 'மாஸ்டர்', 'தர்பார்' போன்ற பல படங்களில் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக 'கபாலி' படத்தின் தீம் பாடலான 'நெருப்புடா' பாடல், இவர் எழுதி பாடியதையடுத்து ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார்.
தமிழ் சினிமாவில் அருண்ராஜா காமராஜ் நடிகராக, பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் தன்மையுடன் வலம் வந்தார். இதனையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து 'கனா' என்னும் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராகவும் தனது இன்னிங்ஸை தொடங்கினார்.
அருண்ராஜா காமராஜ் தற்போது உதயநிதியை வைத்து 'ஆர்டிக்கிள் 15' என்னும் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார். இந்தப் படத்தை அஜித்தின் 'வலிமை' பட தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் பொள்ளாச்சியில் தொடங்கியது. மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அதனை தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டுவந்த உதயநிதி 'ஆர்ட்டிக்கிள் 15' படப்பிடிப்பில் எப்போது கலந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் அடுத்த மாத இறுதியில் மீண்டும் 'ஆர்ட்டிக்கிள் 15' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.